இதுவன்றி, 1“குடிப்பிறப்புக் கல்வி குணம்வாய்மை தூய்மை நடுச்சொல்லு நல்லணி யாக்கங் - கெடுக்கு மழுக்கா றவாவின்மை யவ்விரண்டோ டின்ன விழுக்கா வவையின்க ணெட்டு.’’ |
என்னும் வெண்பாவினுள் ‘யாவது மஃகா வன்பு, யாவது மஃகா வெஃகா வுள்ளம்’ என்பவற்றையே ‘ஆக்கங்கெடுக்கும் அழுக்காறு, ஆக்கங்கெடுக்கும் அவா’ என உடன்பாட்டால் கூறுமாற்றானும், 2“குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுற வாய்மைவாய் மடுத்து மாந்தித் தூய்மையிற் காதலின் பத்துத் தூங்கித் தீதறு நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலு மழுக்கா றின்மை யவாஅ வின்மையென விருபெரு நிதியமு மொருதா மீட்டுந் தோலா நாவின் மேலோர் பேரவை’’ |
எனக் கூறுமாற்றானும் அஃது உணரப்படும். அவற்றுள் குடிப்பிறப்பு என்னையோ எனின், காரியம் காரணத்தின் வேறுபடா இயல்பிற்று ஆதலின், காரணமாகிய மரபின்கண் குற்றமின்மையானே உயர்குலமாகிய குடியில் பிறந்தாரது இயல்பு எனப்படும் என்பது. இனி அவ்வியல்பின்வகை என்னை எனின், 3இன்னிலைக்கும் துறவு நிலைக்கும் உரிய பொதுவியல்பு எனவும், இன்னிலைக்குரிய அந்தணரியல்பு, அரசரியல்பு, வணிகரியல்பு, வேளாளரியல்பு எனவும், துறவுநிலைக்குரிய தவத்தின் இயல்பு, யோகத்தின் இயல்பு, ஞானத்தின் இயல்பு எனவும் எண்வகைப்படும் என்பது அவற்றுள் பொதுவியல்பு என்னையோ எனின்,
1புறப்பொருள் வெண்பாமாலை அவையமுல்லை உரையின் மேற்கோள். 2அச்சிட்ட தொல்காப்பியப் பொருளதிகாரம் 174 வது பக்கம் 2- வது வரி முதலாக. 3இல்+நிலை = இன்னிலை. |