என்பது பெயரெச்சம். அதற்கு ‘உறுநர்’ என்பது அடையாகி நின்றது. ‘மதன்’ என்பது வலி. அது ‘மத’ என்னும் உரிச்சொல் ஈறு திரிந்து நின்றது. ‘மதனை’ என்னும் ஐகாரம் தொக்கு நின்றது. நோன்மை-பொறை. திருவடியடைவார் பலராதலின் அவரெல்லாரையும் பொறுக்க வல்ல தாள் என்னும் பொருண்மைத்தாகி, ‘நோன்றாள்’ என வேற்றுமைத் தொகையாகி ஒருசொல் நீர்மைப் பட்டது. அது ‘மதனுடை நோன்றாள்’ என அடையடுத்து ‘உறுநர்த்தாங்கிய’ என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று. ‘செறுநரை’ என்பது ‘செறுநர்’ என உருபு தொக்கு நின்றது. தேய்த்த என்பது பெயரெச்சம். அதற்குச் ‘செறுநர்’ என்பது அடையாகி நின்றது. ‘செல்’ என்பது மழை. உறழ்தல் என்பது ஒத்தல். அது ‘தடக்கை’ என்பதற்கு உவம நிலையின் அடையாகி நின்று, ‘செல்லுறழ் தடக்கை’ என்று ஒருசொல் நீர்மைப்பட்டது. அது ‘தேய்த்த’ என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று. ‘மறு’ என்பது குற்றம். இல் என்பது இல்லாமை. ‘குற்றமில்கற்பு’ எனக் கற்பிற்கு அடையாயிற்று. ‘வாள்’ என்பது ஒளி. அது ‘ஒளிறுதல்’ என அடையடுத்து நின்று ‘சினையிற்கூறு முதலறிகிளவி’ யாகி அதனையுடையாட்குப் பெயராகி நின்றது. அது ‘மறுவில் கற்பின் வாணுதல்’ எனப் பண்புத் தொகையாகி ஒருசொல் நடையாயிற்று. அது ‘கணவன்’ என்னும் பெயரோடு கிழமைப் பொருட்டாகிய ஆறாம் வேற்றுமைத் தொகையாகி ‘மறுவில் கற்பின் வாணுதல் கணவன்’ என இரண்டாம் வேற்றுமைத்தொகையாகிய ஒரு பெயராயிற்று. அது, ‘செல்லுறழ் தடக்கைக் கணவன்’ என இரண்டாம் வேற்றுமைத் தொகையாகி ஒரு சொல் நீர்மைப்பட்டது. அது மதனுடை நோன்றாள் என்பதனோடும் அவ்வாறே ஒட்டி ‘நோன்றாட் டடக்கைக் கணவன்’ என ஒரு சொன்னடையாயிற்று. அது ‘சேண் விளங்கவிரொளி’ என்பதனோடும் அவ்வாறே ஒட்டிச் ‘சேண் விளங்கவிரொளி நோன்றாட்டடக்கைக் கணவன்’ என ஒரு சொன்னடையாயிற்று. இவ்வாறே சொல் நிலையுணர இரண்டு சொல்லே தொகையாகியவாறு கண்டு கொள்க. ‘எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய’ (எச்ச. 22) என்றோதினமையானும் ஆசிரியன் கருத்து இதுவென்று கொள்க. |