பக்கம் எண் :

பண்புத் தொகை சூ. 20145

அஃதேல், கரிதாகிய குதிரை, வட்டமாகிய பலகை என்பன அத்தொகையின் விரியாகலிற் பண்புத் தொகை பிரிக்கப்படாது என்றது என்னை யெனின், அற்றன்று; தொகைப் பொருள் உணர்த்துதற்குப் பிற சொற்கொணர்ந்து விரித்ததல்லது, தன் சொல்லான் விரியாமையின் அவை விரியெனப்படா என்க. வடநூலாரும் பிரியாத் தொகையும் பிற சொல்லான் விரிக்கப்படும் என்றார். 1பிற சொற் கொணர்ந்து விரிக்குங்கால் கரியகுதிரை, கரிதாகிய குதிரை, கரியது குதிரை என அத்தொகைப் பொருள் உணர்த்துவன வெல்லாவற்றானும் விரிக்கப்படும்,

2கரியது என்னும் பண்பு கொள் பெயர் கருங்குதிரை யெனத் தொக்கது என்றாரால் உரையாசிரியர் எனின், அதனைப் பெயரெச்சம் வினைத்தொகை நிலைமொழி என்றதற்கு உரைத்தாங்கு உரைத்து மறுக்க.

3தனி நிலையாவது கரியன், செய்யன், கருமை, செம்மை என்பனவற்றிற்கெல்லாம் முதனிலையாய்ச் சொல்லாய் நிரம்பாது கரு, செவ் எனப் பண்பு மாத்திரம் உணர்த்தி நிற்பதாம்.

என்னகிளவியும் என்றதனால், சாரைப் பாம்பு, வேழக்கரும்பு, கேழற்பன்றி எனப் பண்பு தொகாது பெயர் தொக்கனவும்


1. பிறசொல் - பெயரெச்ச விகுதி, வினை முற்று விகுதி, ஆகிய என்னும் சொல்.

2. “கரியது என்னும்......... உரைத்தாங்கு உரைக்க” விளக்கம் : பிரிப்பப் பிரியக்கூடி தொகைச் சொற்களுக்கு ஆசிரியர் புணர்ச்சிவிதி கூறியுள்ளார். பண்புத் தொகையும் பிரிப்பப்பிரியுமாயின் அதற்கும் புணர்ச்சி்விதி ஆசிரியர் கூறியிருக்க வேண்டும். கூறாமையோடு ‘புணரியல் நிலையிடை யுணரத் தோன்றா’ என்றும் கூறிவிட்டார். ஆதலின் பண்புத் தொகை பிரிக்கப்படாது என்பது ஆசிரியர் கருத்தாம்.

3. கருங்குதிரை என்பதில் கரு என்பது முதல் நிலைச்சொல் என்பது சேனாவரையர் கருத்து. மற்றையோர் கரிது என்பது முன்மொழி என்பர். தனிநிலையாவது என்பதற்குப் பதிலாக முதனிலையாவது என்றும் பாடம் காணப்படுகிறது;