பக்கம் எண் :

16மெய்ப்பாட்டியல்

1”இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
 சுவைத்தொ றழூஉந்தன் மகத்துமுக னோக்கி
 நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென்
 மனையோ ளெவ்வ நோக்கி நினைஇ
 நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண”

(புறம்-164)

என்புழி, முலைப்பசைகாணாது அழுகின்றது குழவியென்பது, 2தன்கட்டோன்றிய வறுமைபற்றி அவலம் பிறந்தது. மகமுக னோக்கி அழுகின்றாள் என் மனைவியென்பது பிறன்கட்டோன்றிய வறுமையவலம்.

“இன்ன விறலு முளகொ னமக்கென
 மூதிற் பெண்டிர் கசிந்தழ நாணிக்
 கூற்றுக்கண் ணோடிய வெருவரு பறந்தலை”

(புற-19)

என்புழி, மூதிற்பெண்டிர் இழவுபற்றி அழுதாராயிற் கூற்றுக் 3கண்ணோடாதாகலின் அவர் உவந்தனரென்பது பெற்றாம்; அதனானே 4அஃது உவகைக்கலுழ்ச்சியாமென்பது.

(5)

[இளிவரற்சுவை இத்துணைய எனல்]

254.மூப்பே பிணியே வருத்த மென்மையோ
டியாப்புற வந்த விளிவர னான்கே.

இது, மூன்றாம் எண்ணுமுறைமைக்கணின்ற 5இளிவரல் கூறுகின்றது.

இ-ள் : மூப்பும் பிணியும் வருத்தமும் 6மென்மையுமென நான்கு பொருள்பற்றிப் பிறக்கும் இளிவரல் என்றவாறு.

வருத்தமெனினும் முயற்சியெனினும் ஒக்கும். ‘யாப்புற வந்த’ என்பது திட்பமுறவந்த என்றவாறு; அங்ஙனங் கூறிய


1. இல்லி -- துவாரம்.

2. தன் என்றது குழவியை. குழவி தனக்குப் பாலின்றி வறுமையுற்று அழுதமையின் தன் கண் வந்த வறுமை பற்றிய அவலமாயிற்று. தன் மகமுகநோக்கித் தாயழுதாள் என்றது தன் மகவுக்குப் பாலில்லாமையால் அதன் முகநோக்கி அழுதாள் என்ற படி. ஆகலின் பிறன்கட்டோன்றிய வறுமைபற்றிய அவலமாயிற்று. பிறன் என்றது மகவை.

3. கண்ணோடல் -- இரங்கல்.

4. அஃது -- அம்மூதிற் பெண்டிரழுகை.

5. இளிவரல் -- எளிமை, இழிவு.

6. மென்மை -- வலியின்மை.