பக்கம் எண் :

பொருளதிகாரம்205

முறைமை. மற்றுச் சொல்லோத்தினுட் கூறிய மரபிற்கும், மரபியலுள் உரைப்பனவற்றுக்கும், இதற்கும் வேற்றுமையென்னை யெனின்,--இது செய்யுட்கே உரித்து; அவை வழக்கிற்கும் செய்யுட்கும் பொதுவென்பது; அல்லதூஉம் அவற்றது வேறுபாடு முன்னர் அகத்திணையியலுள் கூறிவந்தாம்.

தூக்கென்பது, 1பாக்களைத் துணித்து நிறுத்தல்.

தொடைவகை என்பது, தொடைப்பகுதி பலவுமென்றவாறு; அவை வரையறையுடையனவும் வரையறையில்லனவு மென இருவகைய. 2இப்பகுதியெல்லாம் அடியாற் கோடலின் அடிக்கும் இஃதொக்கும்.

நோக்கென்பது மாத்திரை முதலாகிய உறுப்புக்களைக் கேட்டோர்க்கு நோக்குப்படச் செய்தல்.

பாவென்பது, சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லுங் தெரியாமற் பாடமோதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற்கேதுவாகிய பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை.

அளவியல் என்பது,3அப்பாவரையறை.

திணையென்பது, அகம்புறமென்று அறியச்செய்தல்.

கைகோளென்பது, அவ்வத் திணையொழுக்க விகற்பம் அறியச் செய்தல்; அது களவுங்கற்பும்.

கூற்றுவகையென்பது, அச்செய்யுள் கேட்டாரை இது சொல்லுகின்றார் இன்னாரென உணர்வித்தல், 4‘இவை’ என்


1. பாக்கள் என்றது பரந்துபட்டுச் செல்லும் ஓசைகளை.

2. இப்பகுதி என்றது இருவகைத் தொடைப் பகுதியை. அடிக்கும் ஒக்கும் என்றது தொடைகள் வரும் அடியும் வரையறையுடையனவும் இல்லனவும் என இரண்டாமென்றபடி.

3. அப்பாவரையறை என்றது அடிவரையறை யுள்ளனவும் இல்லனவும் ஆகிய பாவின் அளவியல் என்றபடி. இது பேராசிரியர் கருத்து. 470-ம் 475-ம் சூத்திர உரை நோக்குக.

4. இவை என்பது பாடமாயின் என்றது. கூற்றிவை என்று பாடமாயின என்றபடி. எண்ணிய மூன்று என்றது திணையும் கைகோளும் கூற்றும் என்ற மூன்றையும். எனவே திணையுங் கைகோளும் கூற்றுமாகிய இவையெனத் தொகுத்துக் கூறியதாகக் கொள்க என்றபடி. தொகுத்ததாம் என்பது தொகுத்தவாறே பிறிதில்லை என்பது தொகுத்ததாம் எனவும் பாடம். எண்ணி அம் மூன்றனையும் எனவும் பிரிக்கலாம்.