193 - 213. [அறைக்கரும்பி னரிநெல்லி, னினக்களம ரிசைபெருக, வறளடும்பி னிவர்பகன்றைத், தளிர்ப்புன்கின் றாழ்காவி, னனைஞாழலொடு மரங்குழீஇய, வவண்முனையி னகன்றுமாறி, யவிழ்தளவி னகன்றோன்றி, நகுமுல்லை யுகுதேறுவீப், பொற்கொன்றை மணிக்காயா, நற்புறவி னடைமுனையிற், சுறவழங்கு மிரும்பௌவத், திறவருந்திய வினநாரை, பூம்புன்னைச் சினைச்சேப்பி, னோங்குதிரை யொலிவெரீஇத், தீம்பெண்ணை மடற்சேப்பவுங் கோட்டெங்கின் குலைவாழைக், கொழுங் காந்தண் மலர்நாகத்துத், துடிக்குடிஞைக் குடிப்பாக்கத், தியாழ்வண்டின் கொளைக்கேற்பக், கலவம்விரித்த மடமஞ்ஞை, நிலவெக்கர்ப் பலபெயர:]
யாழ் வண்டின் கொள்ளைக்கு ஏற்ப (211) கலவம் விரிந்த மடமஞ்ஞை (212) நிலவு எக்கர் பலபெயர (213) - 1யாழோசைபோலும் வண்டினது பாட்டினைக்கேட்டு அதற்குப் பொருந்தத் தோகையை விரித்த அறியாமையையுடைய மயில் நிலவுபோலும் இடுமணலிலே பல பகுதிப்பட ஆடவும்,
பெடை தங்குகின்ற மருதநிலத்தை விட்டுப் பாட்டைக்கேட்டு நெய்தனிலத்தே போந்தமைபற்றி மடமஞ்ஞையென்றார்.
அகவர் (220) அறை கரும்பின் அரி நெல்லின் (193) இனம் களமர் இசைபெருக (194) வறள் அடும்பின் இவர் பகன்றை (195) தளிர் புன்கின் தாழ் காவின் (196) நனை ஞாழலொடு மரம் குழீஇய (197) அவண் முனையின் அகன்று மாறி (198) நீல் நிறம் முல்லை பல் திணை நுவல (221) - நாட்டில் வாழ்வார் அறுத்தலைச்செய்யும் கரும்பின்கண்ணும் அரிகின்ற நெல்லின் கண்ணும் எழுப்பின திரண்ட களமருடைய ஓசை மிகுகையினாலே நீரற்ற இடத்திலெழுந்த அடும்பினையும் படர்கின்ற பகன்றையினையும் தளிரையுடைத்தாகிய புன்கினையும் தாழ்ந்தசோலைகளையுமுடையதாய் அரும்பின ஞாழலோடே ஏனைமரங்களும் திரண்ட அந்நாட்டை வெறுத்தார்களாயின் அவ்விடத்தை நீங்கி நெஞ்சாலே கைவிட்டு நீல நிறத்தையுடைய முல்லைக்கொடி படர்ந்த பல காட்டு நிலத்தேசென்று அந்நிலத்தைக் கொண்டாடவும்,
அகவர் (220) இசைபெருக (194) முனையின் அகன்று மாறிப் (198) பஃறிணை நுவல (221) வென முடிக்க.;