நல்கிய பெருமகனாகிய பேகனுமென முடிக்க. 87 - 8. சுரும்பு உண நறு வீ உறைக்கும் நாகம் நெடு வழி-சுரும் புண்ணும்படி நறியபூத் தேனைத் துளிக்கும் சுரபுன்னையை யுடைத்தாகிய நெடிய வழியினின்ற, 89. சிறு வீ முல்லைக்கு பெரு தேர் நல்கிய - சிறிய பூக்களையுடைய முல்லைக்கொடி தடுத்தற்கு அது வேண்டிற்றாகக் கருதிப் பெரிய தேரைக் கொடுத்த, 90 - 91. பிறங்கு வெள் அருவி வீழும் சாரல் பறம்பின் கோமான் பாரியும் - மிகுகின்ற வெள்ளிய அருவி குதிக்கும் பக்கத்தினையுடைய பறம்பென்னும் மலைக்கரசனாகிய பாரியென்னும் வள்ளலும், 91 - 3. கறங்கும் மணி வால் உளை புரவியொடு வையகம் ஈரம் நல் மொழி மருள இரவலர்க்கு ஈந்த காரி (95) - ஒலிக்கும் மணியினையும் வெள்ளிய தலையாட்டத்தினையுமுடைய குதிரையோடே தனது நாட்டினையும், அருளினையுடைய நன்றாகிய மொழியினையும் ஏனையோர் கேட்டு வியக்கும்படி இரவலர்க்குக் கொடுத்த காரி, ஈரநன் மொழிமருள வென்றுமாறுக. 94 - 5. அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சு வரு நெடு வேல் கழல் தொடி தட கை காரியும் - 1தன்னிடத்துறையும் கொற்றவையுடைய கோபத்தின் மிகுதியினாலே தான் விளங்கும் அச்சந்தோன்றும் நெடிய வேலினையும் உழலுந்தொடியினை யணிந்த பெருமையையுமுடைய கையினையுமுடைய காரியென்னும் வள்ளலும், 95 - 7. [நிழறிகழ், நீல நாக நல்கிய கலிங்க, மாலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த:] நாகம் நல்கிய நிழல் திகழ் நீலம் கலிங்கம் ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த ஆய் (99) - பாம்பு ஈன்று கொடுத்த ஒளிவிளங்கும் நீலநிறத்தையுடைய உடையினை ஆலின்கீழிருந்த இறைவனுக்கு நெஞ்சு பொருந்திக் கொடுத்த ஆய், 98 - 9. சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள் ஆர்வம் நல் மொழி ஆயும்-வில்லை யெடுத்த சந்தனம் பூசிப்புலரும் திண்ணிய தோளி
1‘அழல்' என்பதற்கு ஈண்டு உரை எழுதப்பட்டிருத்தல் போல இந்நூல் 102-ஆம் அடியிலுள்ள ‘சினம்' என்பதற்கும் பொருளெழுதப் பெற்றுள்ளது - ஆயுதங்களிற்கொற்றவையிருத்தல்: "வருங்கொற்றமார்க்கு மணங்கினுடனே, மருங்கிற் றிருவுடைவாள் வாய்ப்ப" (விக்கிரம. உலா, 49); "வென்றி மங்கை வேடர் வில்லின் மீதுமேவு பாத முன், சென்று மீளு மாறு போல்வ" (பெரிய. கண்ணப்ப. 68); "போர்விசையமான்.........வாளிடையும்............தழைத் தோங்க" (வனச விடுதூது, 2-4)
|