"சூ.69) என்றதனால், 1 ஆணென்றது ஆண்பாலையே யுணர்த்துமேனும் அணிபுகுதலென்றதனால் ஈண்டு வீரரையுணர்த்திற்று. 2 அழி படை தாங்கலும் - தனது கெட்ட படையிடத்தே தான் சென்று பகைவரைப் பொறுத்தலையும், 212. வாள்மீ கூற்றத்து வயவர் ஏத்த - வாள்வலியாலே மேலாகிய சொல்லையுடைய வீரர் புகழ, 213. கருதியது முடித்தலும் - தன்னெஞ்சு கருதிய புணர்ச்சியைக் குறைகிடவாமல் முடிக்கவல்ல தன்மையையும், நுகர்தற்குரிய மகளிரை நுகர்ந்து பற்றறாக்காற் பிறப்பறாமையிற் கருதியது முடிக்கவேண்டுமென்றார்.காமுற படுதலும் - அங்ஙனம் தானே இன்பமுறாதே அம்மகளிரும் தம்மாலே மிக்க இன்பத்தைப்பெறும் தன்னை விரும்பப்பட்டிருத்தலையும், 214. ஒரு வழி படாமையும் - அவர்கள் அங்ஙனம் விரும்பினார்களென்று அவர்கள் வசத்தனாகாமையும்,ஓடியது உணர்தலும் - தான் அவர் வசத்தனாகாமையின் அவர் வருந்திய தன்மையையுணர்ந்து அவரைப்பாதுகாத்தலையும், இனி, அவர்கள் நெஞ்சில் நிகழ்ந்ததனையுணர்ந்து அவர் குறை முடித்தலென்றுமாம். 215. அரி ஏர் உண் கண் அரிவையர் ஏத்த - செவ்வரிபொருந்தின மையுண்கண்ணினையுடைய மகளிர் புகழ, 216. அறிவு மடம் படுதலும் - தான் கூறுகின்றவற்றை உணரும் அறிவில்லாதார்மாட்டுத் தான் அறியாமைப்பட்டிருத்தலையும்,அறிவு நன்கு உடைமையும் - தன்னைப்போல் அறிவுடையார் மாட்டு நன்றாக அறிவுடையனாயிருத்தலையும்,"ஒளியார்மு னொள்ளிய ராதல் வெளியார்முன், வான்சுதை வண்ணங் கொளல்" (குறள், 714) என்றார் பிறரும். 217. வரிசை அறிதலும் - பரிசிலருடைய தரமறிந்து அவர்பெறு முறைமையே கொடுத்தலையும், கொடுத்தல் இதற்குங்கூட்டுக.
1 "விந்தா சனிகொண்கன் வேந்தரி லாண்பிள்ளை" (வங்கர்கோவை) என்றவிடத்தும் ஆணென்பது வீரரென்னும் பொருள் தருதல் காண்க. 2 அழிபடை தாங்கலென்னும் பெயரிய புறத்துறை ஒன்றுண்டு; "இழிபுடன் றிகல்பெருக, அழிபடை யரண்காத்தன்று" (பு. வெ. 93) என்பது அதன் இலக்கணம்.
|