பல்லுணவென்றார், செந்நெல்முதலிய சாதிப்பன்மை கருதி. 247. குமரி மூத்த கூடு ஓங்கு நல் இல்-அழியாத்தன்மையவாய் முதிர்ந்த கூடுகள் வளர்ந்த நல்ல இல்லினையும், அல்குலினையும், மார்பினையும், உணவினை உடைய கூடென்க. 248-9. தச்சச் சிறாஅர் நச்சபுனைந்த ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர்-தச்சச் சாதியிற்பிறந்த தொழில்செய்தற்குரிய சிறியோர் பிறர் விரும்பும்படி பண்ணின பிறராலே ஏறப்படாத நல்ல சிறுதேரை உருட்டிக்கொண்டு திரிந்த பிள்ளைகள், 250. தளர் நடை வருத்தம் வீட-தமது தளர் நடையால் உண்டான வருத்தம் தம்மை விட்டு நீங்கும்படி, 250-52, அலர் முலை செவிலி அம் பெண்டிர் தழீஇ பால் ஆர்ந்து அமளி துஞ்சும் அழகு உடை நல் இல்-பால்சுரந்த முலையினை உடைய செவிலித்தாயராகிய அழகினையுடைய மகளிரைத் தழுவிக்கொண்டு அம்முலையிற் பாலை நிறைய உண்டு தமது படுக்கையிலே துயில்கொள்ளும் அழகை உடைத்தாகிய நல்ல இல்லினையும், செவிலியம் பெண்டிர் என்பது ஒருமை பன்மை மயக்கம். 253-4. தொல் பசி அறியா துளங்கா இருக்கை மல்லல் பெரு ஊர் மடியின் - ஏனை நாட்டிற்கு இயல்பாகிய பழையமிடியை அறியாத அசையாத குடியிருப்பினையு உடைய வளப்பத்தை உடைத்தாகிய பெரிய ஊரின் கண்ணே தங்கின், 254-6. மடியா வினைஞர் தந்த வெள் நெல் வல்சி மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்- தொழிலொழிந்திராத தொழில்செய்வார் கொண்டுவந்த வெள்ளிய நெற்சோற்றை மனையின் கண்ணே வாழும் கோழிப்பெடையினாற் சமைத்த பொரியலோடு பெறுகுவிர்; "கோழி கூகை யாயிரண் டல்லவை, சூழங் காலை யளகென லமையா"(தொல். மரபியல்.சூ. 55) என்றார். செறுவிற்(212) புதுப்பூ முனையின் (214)மாமலர் கொய்துகொண்டு (216) சவட்டிப் (217)பெய்த கண்ணியைச் (218) சூடித் (219)தளரா இருக்கைகளிற் (242) கூடோங்கு நல்ல இல்லையும்(247) அழகினையுடைய நல்ல இல்லையும் (252)துளங்கா இருக்கையினையும் உடைய (253) பேரூரிலேதங்குவீராயின் (254) வல்சியை (255) வாட்டொடும் பெறுகுவிர் எனக் கூட்டுக. 257-9. [மழைவிளை யாடுங் கழைவளரடுக்கத், தணங்குடை யாளி தாக்கலிற் பலவுடன், கணஞ்சால் வேழங் கதழ்வுற் றாஅங்கு:] மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து அணங்கு உடை யாளி தாக்கலின் கணம் சால் வேழம் பல உடன் கதழ்வு உற்றாங்கு - .
|