இதன் பொருள் இப்பாட்டிற்கு மாங்குடிமருதனார் மதுரைக்காஞ்சியென்று துறைப்பெயரானன்றித் திணைப்பெயராற் பெயர் கூறினார். இத்திணைப் பெயர் பன்னிருபடல முதலிய நூல்களாற் கூறிய திணைப்பெயரன்று, தொல்காப்பியனார் கூறிய திணைப்பெயர்ப்பொருளே இப்பாட்டிற்குப் பொருளாகக் கோடலின். வஞ்சி மேற்செல்லலானும், காஞ்சி எஞ்சாதெதிர் சென்றூன்றலானும், "வஞ்சியுங் காஞ்சியுந் தம்முண் மாறே" எனப் பன்னிருபடலத்திற்கூறிய திணைப்பெயர் இப்பாட்டிற்குப் பொருளன்மையுணர்க. அவர் முதுமொழிக்காஞ்சி முதலியவற்றைப் பொதுவியலென்று ஒரு படலமாக்கிக்கூறலின், அவை திணைப்பெயராகாமை யுணர்க. இனி, மதுரைக்காஞ்சியென்றதற்கு மதுரையிடத்து அரசற்குக் கூறிய காஞ்சியென விரிக்க. இஃது உருபும்பொருளும் உடன்றொக்கது. "காஞ்சி தானே பெருந்திணைப் புறனே" (தொல். புறத். சூ 22) என்பதனாற் காஞ்சி பெருந்திணைக்குப் புறனாயிற்று. அது, "பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானு, நில்லா வுலகம் புல்லிய நெறித்தே" (தொல். புறத். சூ. 23) என்பதாம். இதன்பொருள் : பாங்கு அருசிறப்பின்-தனக்குத் துணையில்லாத வீடுபேறு நிமித்தமாக, பல ஆற்றானும்-அறம் பொருள் இன்பமென்னும் பொருட்பகுதியானும், அவற்று உட்பகுதியாகிய உயிரும் யாக்கையும் செல்வமும் இளமையு முதலியவற்றானும், நில்லா உலகம் புல்லிய நெறித்து-நிலைபேறில்லாத உலகியற்கையைப் பொருந்திய நன்னெறியினை உடைத்து அக்காஞ்சியென்றவாறு. எனவே, வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமை சான்றோரறையுங் குறிப்பினது காஞ்சித்திணையென்பது பொருளாயிற்று. இச்செய்யுட்புலவர் இப்பொருளே கோடலின், யாம் இப்பொருளே தர உரைகூறுகின்றாம் 1-2. [ஓங்குதிரை வியன்பரப்பி, னொலிமுந்நீர் வரம்பாக :] வியல்பரப்பின் ஓங்கு திரை ஒலி முந்நீர் வரம்பு ஆக - அகலத்தையுடைத்தாகிய நீர்ப்பரப்பின்கண்ணே ஓங்குதிரை ஒலிக்குங்கடல் எல்லையாக, 3-4. தேன் தூங்கும் உயர் சிமையம் மலை நாறிய வியல் ஞாலத்து-தேனிறால் தூங்கும் உயர்ந்த உச்சியையுடைய மலைகள் தோன்றிய அகலத்தையுடைய ஞாலத்தின்கண்ணே, 5. வலம் மாதிரத்தான் வளி கொட்ப-வலமாக ஆகாயத்தின் கண்ணே காற்றுச் சுழல, 6. வியல் நாண்மீன் நெறி ஒழுக-அகலத்தையுடைய நாண்மீன்கள் தாம் நடக்கும் நெறியின்கண்ணே நடக்க, 7, பகல் செய்யும் செ ஞாயிறும்-பகற்பொழுதை உண்டாக்கும் சிவந்த பகலோனும்,
|