413

என்றது, கட்டின சேலையிடத்தே செருகித் துடையுடனே சேர்ந்து கிடக்குஞ் சொட்டையின்மேலே கட்டின நீலக்கச்சினரென்றவாறு. அது தெரியாமல் துடையுடனே சேர்ந்துகிடத்தலிற் குறங்கிடைப் பதித்தவென்றார்.

மெல் நூல் ஏணி பல் மாண் சுற்றினர் (640)-மெல்லிய நூலாற் செய்த ஏணியை அரையிலே பலவாய் மாட்சிமைப்படச்சுற்றிய சுற்றினையுடையராய்,

மதிற்றலையிலே உள்ளேவிழவெறிந்தாற் கைபோல மதிலைப்பிடித்துக் கொள்ளும்படி இரும்பாற்சமைத்ததனைத் தலையிலேயுடைய நூற்கயிற்றை உள்ளே விழவெறிந்து அதனைப் புறம்பேநின்று பிடித்துக் கொண்டு அம்மதிலை ஏறுவாராகலின், ஏணியென்றார்.

641. கலன் நசைஇ கொட்கும்-பேரணிகலங்களை நச்சுதலாலே அவற்றை எடுத்தற்கு இடம்பார்த்துச் சுழன்றுதிரியும்,

642. கண் மாறு ஆடவர் ஒடுக்கும் ஒற்றி-விழித்தகண் இமைக்கு மளவிலே மறைகின்ற கள்வர் ஒதுங்கியிருக்கின்ற இடத்தை1வேய்த்து,

செருப்பைத் தொட்டுக் (636) கச்சைக்கட்டி (639) நூலேணியைச் சுற்றி (640) உளியையெடுத்து (635) வாளைப்பிடித்துக் (636) கொட்குங் (641) கள்வரென வினையெச்ச வினைக்குறிப்புமுற்று வினையெச்சமாய் நிற்குமாறு, "முன்னத்தி னுணருங் கிளவியு முளவே" (தொல். எச்சவியல், சூ. 63) என்னுஞ் சூத்திரத்தானுணர்க.

643. வய களிறு பார்க்கும் வய புலி போல ஒற்றி (642)-வலிய களிற்றை இரையாகப்பார்க்கும் வலிய புலியைப்போல வேய்க்கையினாலே,

644. துஞ்சா கண்ணர்-துயில்கொள்ளாத கண்ணையுடையராய்,

அஞ்சா கொள்கையர்-பேய்முதலியவற்றிற்கு அஞ்சாத கோட்பாட்டை யுடையராய்,

645. அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் - களவிற்றொழிலையறிந்த வர்களாலே புகழப்பட்ட2களவிற்றொழிலை ஆளுந்தன்மையுடையராய்,

645-7. [செறிந்த, நூல்வழிப் பிழையா நுணங்குநுண் டேர்ச்சி யூர்காப் பாளர் :] நுணங்கு செறிந்த நூல் வழி பிழையா நுண் தேர்ச்சி ஊர் காப்பாளர்-நுண்மைசெறிந்த நூலின்வழியைத்தப்பாத நுண்ணிய ஆராய்ச்சியையுடைய ஊரைக் காத்தற்றொழிலை ஆளுதலையுடையராய்,


1.வேய்த்து-பிறர்தெரிந்து கொள்ளாதபடி அறிந்து.

2.காவலர் களவினை யறிந்திருந்தாரென்பது இதனாற் புலப்படும் ; "களவுங் கற்று மற"என்னும் பழமொழி இங்கே அறியத்தக்கது.