423

ஓட்டிய செரு புகல் மறவர்-மிக்குவருகின்ற யாற்றுநீரிடத்துக் கல்லணை நின்று தாங்கினாற்போலத் தம்படையைக்கெடுத்து1மிக்குவருகின்ற பகைவர்படையை நடுவேதவிர்த்து அவரைக்கெடுத்த போரைவிரும்பும் படைத்தலைவர்,

"வருவிசைப் புனலைக் கற்சிறை போல, வொருவன் றாங்கிய பெருமை யானும்" (தொல். புறத். சூ. 8) என்னும் வஞ்சித்துறை கூறினார். இதுகூறவே முன்னர்2மாராயம் பெற்றவர்களே இப்போரைச் செய்வரென்பது ஆண்டுப் பெற்றாமாகலின், இவர்கள்3ஏனாதிப்பட்டம் முதலிய சிறப்புப் பெற்ற படைத்தலைவரென்பது பெற்றாம்.


1."தன்மேற் கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டும்" (பு. வெ. 11)

2.மாராயம்-வேந்தனாற் செய்யப்பெறுஞ்சிறப்பு : அவையாவன, ஏனாதி காவிதி முதலிய பட்டங்களும் நாடும் ஊரும் முதலியனவும் பெறுதல் ; "கால மாரியி னம்பு தைப்பினும் ............... ஓடல் செல்லாப் பீடுடை யாளர், ................ தண்ணடை பெறுதல் யாவது" (புறநா. 287:3-10)

3.ஏனாதிப்பட்டம் : இஃது அரசரால் வீரர்க்கு அளிக்கப்படும் ஒரு பட்டம் ; இதனை, "மாராயம் பெற்ற நெடுமொழி யானும்" (தொல். புறத். திணை. சூ. 8) என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் எழுதிய வுரையாலும், "போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக், கார்க்கடல் பெற்ற கரையன்றோ-போர்க்கெல்லாந், தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சே, ரேனாதிப் பட்டத் திவன்" என அவர் எடுத்துக் காட்டிய பழம்பாட்டாலும் உணர்க. இப்பட்டத்திற்குரிய மோதிரமொன்றும் அரசரால் அளிக்கப்படுமென்பது மேலேயுள்ள பாடலாலும், "என்னை? ஏனாதிமோதிரஞ் செறிந்த திருவுடையா னொருவன் ஏனாதி மோதிரஞ் செறிக்கும் அத்திரு அவன் செறிக்கின்ற பொழுதே உண்டா. யிற்றன்று" (இறை. சூ. 2, உரை) என்பதனாலும், "ஆழி தொட்டான்" (சீவக. 2167) என்பதற்கு ‘ஏனாதி மோதிரஞ் செறித்த சேனாபதி' என்று எழுதியிருப்பதனாலும் விளங்கும். இப்பாட்டின் 719-ஆம் அடியில் வரும் விளக்க மென்பதற்குப் பொருளாகக் கூறிய மோதிர மென்பது இவ்வேனாதி மோதிரமே. இச்சிறப்புப் பெற்றோர் மந்திரிகளாகவும் இருத்தல், மணி. 22-ஆங்காதைத் தலைப்பிலுள்ள, "மந்திரியாகிய சோழிகவேனாதி' யென்பதனால் விளங்கும். "சேனாதிபதி ஏனாதியாயின சாத்தன் சாத்தற்கு" (வேள்விக்குடிச் சாஸனம்) "ஏனாதிநல்லுதடன்" (தொல். கிளவி. சூ. 41, சே. ந.), "ஏனாதி திருக்கிள்ளி" (புறநா. 167) ; "ஏனாதி ஏறன்" (நன். சூ. 392, மயிலை. மேற்.) ; ஏனாதி நாத நாயனாரென்பன இக்காரணம்பற்றி வந்த பெயர்கள் போலும்.