80 - 93. [ நெடுந்தூண்டிலிற் காழ்சேர்த்திய, குறுங்கூரைக் குடி நாப்ப, ணிலவடைந்த விருள்போல, வலையுணங்கு மணன்முன்றில், வீழ்த்தாழைத் தாட்டாழ்ந்த, வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர், சினைச்சுறவின் கோடுநட்டு, மனைச்சேர்த்திய வல்லணங்கினான், மடற்றாழை மலர்மலைந்தும், பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும், புன்றலையிரும்பரதவர், பைந்தழைமா மகளிரொடு, பாயிரும் பனிக்கடல் வேட்டஞ்செல்லா, துவவுமடிந் துண்டாடியும் :]
1 புன்றலை இரு பரதவர் (90) - சிவந்த தலையினையுடைய பெரியபரதவர்,
உவவு (93) - உவாநாளாகையினாலே,
பாய் இரு பனி கடல் வேட்டம் செல்லாது (92) மடிந்து (93) - பரந்த கருமையையுடைய குளிர்ந்த கடலில் மீன்பிடித்தற்குப் போகாது மனவெழுச்சி தவிர்ந்து,
பைந்தழை மா மகளிரொடு (91) - பசிய 2 தழையினையுடைய கரிய நிறத்தினையுடைய தம்மகளிரோடே கூடி,
நெடு தூண்டிலில் காழ் சேர்த்திய (80) குறு கூரை குடி நாப்பண் (81) - நெடிய தூண்டிலிற் காம்புகள் சார்த்திவைத்த குறிய இறப்பினையுடைய குடியிருப்பு நடுவில்,
நிலவு அடைந்த இருள் போல (82) விலை உணங்கு மணல் முன்றில் (83) மனை (87) - நிலவு நடுவேசேர்ந்த இருளைப்போலே வலைகிடந்து உலரும் மணலையுடைத்தாகிய முன்றிலினையுடைய மனையிடத்தே,
சினை சுறவின் கோடு நட்டு (86) சேர்த்திய வல் அணங்கினால் (87) - சினையையுடைய சுறவின் கொம்பைநட்டு அதனிடத்தே ஏற்றிய வலிய தெய்வங் காரணமாக,
வீழ் தாழை தாள் தாழ்ந்த (84) வெண் கூதாளத்து தண்பூ கோதையர் (85) - 3விழுதையுடைய தாழையின் அடியிடத்தேநின்ற வெண்டாளியினது தண்ணிய பூவாற் செய்த மாலையினையுடையராய்,
மடல் தாழை மலர் மலைந்தும் (88) - மடலையுடைய தாழையினது மலரைச் சூடியும்,
பிணர் பெண்ணை பிழி மாந்தியும் (89) - சருச்சரையையுடைய பனையிற் கள்ளையுண்டும்,
1 "புட்கை போகிய புன்றலை மகாரோடு " (மலைபடு. 253) என்ற விடத்தும் புன்றலை யென்பதற்குச் சிவந்ததலையென்று உரையெழுதுவர்.
2 தழை - தளிர்கள் , தழைகள், மலர்கள் இவற்றாலாகிய உடை விசேடம் ; 3 இதனால் தென்னை விழுதில்தாழையென்று வழங்கப்படும் ; " வீழி றாழைக் குழவித் தீநீர் " (பெரும்பாண். 57)