1 - திருமுருகாற்றுப்படை 279 - 80. நின்னொடு புரையநர் இல்லா புலமையோய் - நின்னொடு ஒப்பாரில்லாத மெய்ஞ்ஞானத்தை உடையோய், 280 - 81. என குறித்தது மொழியா அளவையின் - என்று சொல்லி நீ கருதிய வீடுபேற்றினை விண்ணப்பஞ் செய்வதற்கு முன்னே, முந்துநீ கண்டுழி முகனமர்ந்து (251) மகனே கூற்றே (257) குழவி (259) வெறுக்கை சொன்மலையாயிருப்பாய் (263) மைந்தரேறே (264) புலவரேறே (268) சேஎய் (271) வேஎள் (273) இயவுளே (274) மதவலி (275) குரிசில் (276) புலமையோய் (280) என்று முன்னர் எதிர்முகமாக்கி ஏத்தி (251) யென அண்மைவிளியல்லாதனவற்றை முன்னர்க் கூட்டி முடிக்க. அங்ஙனம் எதிர்முகமாக்கி யேத்திப் பின்னர்ப் பரவி வணங்கிச் (252) செல்வ (255) புதல்வ (256) சிறுவ (258) தலைவ (260) மார்ப புலவ (261) ஒருவ மள்ள (262) கணவ (264) செல்வ (265) கிழவ (267) முருக (269) இசைபேராள (270) பொருந (276) என்று அண்மையாக விளித்து, மன்னுயிர்க்கருமையின் (278) யானறி யளவையினேத்தி (277) நின்னடியுள்ளி வந்தனென் (279) என்று நீ குறித்தது மொழியா வளவையினென முடிக்க. 281 - 2. [ குறித்துடன், வேறுபல் லுருவிற் குறும்பல் கூளியர் :] வேறு பல் உருவில்1குறு பல் கூளியர் உடன் குறித்து - வேறுவேறாகிய பல வடிவினையுடைய சிறிய பலராகிய சேவித்து நிற்பார் சேரக்கருதி, "நின், கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர்" (புறநா. 23 : 4-5) என்றார் பிறரும். 283. சாறு அயர் களத்து வீறுபெற தோன்றி - விழாவெடுத்த களத்தே தாங்கள் பொலிவுபெறத் தோன்றி, 284. [ அளியன்றானே 2முதுவா யிரவலன் :] முதுவாய் இரவலன் தான் அளியன் - அறிவு முதிர்ந்த வாய்மையையுடைய புலவன்றான் அளிக்கத்தக்கான். 285-6. [ வந்தோன் பெரும நின் வண்புகழ் நயந்தென, இனியவு நல்லவு நனிபல வேத்தி :] பெரும நின் வள் புகழ் நயந்து இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி வந்தோன் என - பெரும, நினது வளவிய புகழினைக்கூற விரும்பிக் கேட்டோர்க்கு இனியனவும் உறுதிபயப்பனவுமாக மிக்க பலவற்றை வாழ்த்தி வந்தோனென்று கூற, கூளியர் (282) குறித்துத் (281) தோன்றி (283) அளியன் (284) பெரும நின் வண்புகழைக் கூறநயந்து (285) இனியவும் நல்லவுமாக ஏத்தி (286) வந்தோன் (285) என்று கூறவென முடிக்க.
1. குறும்பல் கூளியர் - குறியவாயிருப்பன பல பூதங்கள் ; கூளிகளென்று பேய்க்கும் பெயராம் (வேறுரை) 2. நிரம்பவோதிய புலவன் (வேறுரை)
|