பக்கம் எண் :

256

ஞாயிறுபோல இருளைக்கடிந்து முறைவேண்டுநர்க்கும் குறைவேண்டுநர்க்கும் வேண்டுவன வேண்டுவன முடித்துக்கொடுத்தலின், அவனை உவமித்தார்.

கடலைச் சுற்றத்திரட்சிக்கு உவமையாக்கலுமொன்று.

1பொறி வரி புகர் முகம் தாங்கிய வய மான் (448) கொடுவரிகுருளை கொள வேட்டாங்கு (449)- ஒளியினையும் வரியினையுமுடைய யானையைப்பாய்ந்த வலியையுடைய சிங்கத்தினுடைய வளைந்தவரியினையுடைய குருளை அவ்வியானையின் மத்தகத்தைக் கொள்ள விரும்பினாற்போல,

450-52. பகைவர் கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும் வென்றி அல்லது- பகைவரது காவலையுடைய மதில்களையழித்து ஆண்டிருந்த அரசருடைய முடிக்கலமுதலியவற்றை வாங்கிக்கொண்டு வீரமுடிபுனையும் வெற்றியினை விரும்புதல்லது.

இதனால், "இகன்மதிற் குடுமிகொண்ட மண்ணுமங்கலம்" (தொல். புறத். சூ .13) என்னுந்துறை கூறினார் ; 2குடுமிகொள்ளும் வென்றியெனவே மண்ணுமங்கலமாயிற்று.

452-4. வினை உடம்படினும் ஒன்றல் செல்லா உரவு வாள் தடகை கொண்டி உண்டி தொண்டையோர் மருக-அம்மதிலரசர் 3சந்து செய்தற்கு உடம்பட்டாராயினும் அதற்கு மனம் பொருந்துதல் நிகழாமைக்குக் காரணமாகிய உலகெங்கும் பரக்கும் வாளையுடைத்தாகிய பெருமையையுடைய கையினையும் பகைப்புலத்துக் கொள்ளையாகிய உணவினையுமுடைய 4தொண்டையைச் சூடினோருடைய குடியிலுள்ளவனே.

455. மள்ளர் மள்ள-வீரர்க்கு வீரத்தைக்கொடுக்கின்றவனே. மறவர் மறவ - கொடியோர்க்குக் கொடியவனே.

456. செல்வர் செல்வ-செல்வமுடையோர்க்கும் கொடுத்தலை விரும்புபவனே, செரு மேம்படுந-போர்த்தொழிலிலே மிக்கவனே. பெரும(461) - பெருமானே,

457-8. வெள் திரை பரப்பில் கடு சூர் கொன்ற பைம்பூண் சேஎய் பயந்த மா மோடு-வெள்ளிய திரையினையுடைய கடலிலே


1 பொறி-ஒளி: "கண்பொறி போகிய-கண்ணொளி மழுங்கிய" (புறநா. 161 : 13,உரை)

2 "குடுமிகொள்ளு மண்ணு மங்கலம்" (கூர்ம,)

3 சந்து செய்தல்-பொருத்துதல்.

4 தொண்டையைச் சூடிய வரலாற்றை,பெரும்பாண். 30-31-ஆம்அடிகளின் உரையிற் காணலாம்.