பக்கம் எண் :

262

நொடித்தாங்கு (459) நின் பெயருட் சிலவற்றைச் சொல்லிப் புகழ்ந்து (460) வந்தேன் ; வாழியவெனச் சொல்லிக் (461) கழிப்பிப் (462) பழிச்சி (463) நின்னுடைய கலைகளெல்லாந் தனக்குத்தெரிவதற்கு முன்னே (464) மலைகிழவோன் (500), நில்லாவுலகத்துநிலைமை தூக்கி (466) அந்நிலையணுகல் வேண்டி அழைத்துச் (467) சிதர்வை நீக்கி (468) உடீஇ (470) அமுதோடே (475) குறையும் (472) புழுக்கலும் (474) பிறவுமாகிய (475) அடிசிலைக் (476) கலங்களைப் பரப்பித் (477) தான் (479) முகனமர்ந்து மகமுறைநோக்கி (478) முன்னின்றூட்டி (479) விறலியர் மாலை வேயாநிற்க (486) நுமக்குத் தாமரை (481) பொலியச்சூட்டி (482) அரித்தேர் நல்கியும் அமையானாய் (490) இவுளியொடு பசும்படை தரீஇ (492) அவன் அன்றே (493) அந்நிலையிலே (464) நாவலந்தண்பொழில் வீவின்று விளங்கும்படி (465) இவையொழிந்த பரிசில்களையும் தரும் (493) என வினைமுடிவு செய்க.

இப்பாட்டில் ஒருமைபன்மை மயக்கம், "முன்னிலை சுட்டியவொருமைக் கிளவி.......போற்றல் வேண்டும்" (தொல். எச்ச.சூ.66) என்பதனாற் கொள்க.

தொண்டைமானிளந்திரையனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப்படைக்கு மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்தவுரை முற்றிற்று.


வெண்பா

கங்குலு நண்பகலுந் துஞ்சா வியல்பிற்றாய்
மங்குல்சூழ் மாக்கட லார்ப்பதூஉம் -வெஞ்சினவேற்
கான்பயந்த கண்ணிக் கடுமான் றிரையனை
யான்பயந்தேனென்னுஞ் செருக்கு