திரிதரும் வேந்தன்- நள்ளென்னும் ஒசையையுடைய நடுவியாமத்தும் பள்ளிகொள்ளானாய்ச் சிலவீரரோடே புண்பட்டோரைப் பரிகரித்துத் திரிதலைச் செய்யுமரசன், 188. பலரொடு முரணிய பாசறை தொழில் - சேரன் செம்பியன் முதலிய 1எழுவரோடே மாறுபட்டுப் பொருகின்ற பாசறையிடத்துப்போர்த்தொழில், புண்காணிய புறம்போந்து (172) சுடரழலக் (175) காட்ட (177) விதிர்ப்பத் (180) தழீஇக் (181) கையனாய் அமர்ந்து (183) மறைப்பப் (185) பள்ளி கொள்ளானாய்த் (186) திரியும்வேந்தன் (187) என்க. அம்ம (168) வானம் கார்காலத்து மழையைப் பெய்ததாகப் (2) பின்னர் நிகழ்ந்தபொழுது கூதிர்க்காலமாய் நிலைபெற்றது (72) ; அக்கூதிர்க்காலத்து நடுவியாமத்தே (75) வாயிலினையும் (88) முன்கடையினையும் (92) முற்றத்தினையும் (90) சிறப்பினையுமுடைய (89) கோயில் (100) வரைப்புக்களிற் (107) காண்பினல்லில்லிற் (114) பாண்டிலிற் (123) சேக்கையிலே (135) வதியுமரிவைக்குப் (166) படர்தீரும்படி (167) வேந்தன் (187) பலரொடுமுரணிய பாசறைத்தொழில் (188) விறறந்து (167) இன்னேமுடிவதாக ; இஃது எனக்கு விருப்பம் (168) எனக் கொற்றவையைப்பரவிற்றாக வினைமுடிக்க. இப்பாட்டுத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மண்ணசையாற்சென்று பொருதலின், இப்போர் வஞ்சியாகலின், வஞ்சிக்குக்கொற்றவை நிலையுண்மையின், (பு. வெ. 40), கொற்றவையை வெற்றிப்பொருட்டுப் பரவுதல் கூறினார் அது பாலைத் திணைக்கு ஏற்றலின். பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்பாடிய நெடுநல்வாடைக்கு மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த உரை முற்றிற்று. _______ வெண்பா 2வாடை நலிய வடிக்கண்ணா 3டோணசைஇ ஓடை மழகளிற்றா னுள்ளான்கொல் ---- கோடல் முகையோ டலமர முற்றெரிபோற் பொங்கிப் பகையோடு பாசறையு ளான்.
1எழுவர் பெயரையும் மதுரைக்காஞ்சி, 55 - 6 - ஆம் அடிகளின் குறிப்புரைகளாலுணரலாகும். 2இவ்வெண்பா, புறப்பொருள் வெண்பாமாலையில் வாடைப் பாசறை யென்னும் துறைக்கு (170) உதாரணமாகக் காட்டிய செய்யுள். 3 (பி-ம்) ‘தோணசை'
|