பெருக்கிப், பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக், கோயிலொடு குடி நிறீஇ, வாயிலொடு புழையமைத்து, ஞாயிறொறும் புதைநிறீஇப், பொருவேமெனப் பெயர்கொடுத், தொருவேமெனப் புறக்கொடாது, திருநிலைஇய பெருமன்னெயில் :] புல் பொதுவர் வழி பொன்ற (281) - புல்லிய இடையராய் அரசாள் வோர் கிளைமுழுதுங் கெட்டுப்போக, 1இருங்கோவேள் மருங்கு சாய (282) - ஐம்பெருவேளிர் குல முழுதுங் குறைய, காடு கொன்று (283) - சோழமண்டலத்திற் காடாகிய இடங்களை வெட்டிப் போகட்டு, நாடு ஆக்கி (283) - பண்டுபோலக் குடியிருந்து விளையப்பண்ணி, குளம் தொட்டு (284) - தூர்ந்த குளங்களைக் கல்லி, வளம் பெருக்கி (284) - நாட்டிற்குச் செல்வத்தை மிகுத்து, பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி (285) - பெரிய நிலைகளையுடைய மாடங்களையுடைய உறந்தையென்னும் தன்னூரைப் போக்கி, கோயிலொடு குடி நிறீஇ (286) - கோயில்களோடே பழைய குடிகளையும் பண்டுபோல நிலைநிறுத்தி, திரு நிலைஇய பெரு மன் எயில் (291) - திருமகள் நிலைபெற்ற பெரிய ஆக்கத்தையுடைய உறந்தையின் மதிலிடத்தே, வாயிலொடு புழை அமைத்து (287) - பெரிய வாசல்களோடே சிறிய வாசல்களையு முண்டாக்கி, ஞாயில் தொறும் புதை நிறீஇ (288) - அதன்தலையில் எய்துமறையும் சூட்டுத்தோறும் அம்புக்கட்டுகளையும் கட்டிவைத்து, ஒருவேம் என புறம் கொடாது (290) பொருவேம் என பெயர் கொடுத்து (289) மன்னர் (277) மன் எயில் கதுவும் மதன் உடை நோன்தாள் (278) மா தானை மறம் மொய்ம்பின் (279) தென்னவன் திறல் கெட (277) செ கண்ணால் செயிர்த்து நோக்கி (280) சீறி (277) - யாம் தமியே மென்று கருதிப் பல அரசர்கள் வந்தால் முதுகிடாது அவர்களுடனும் பொரக்கடவேமென வஞ்சினத்தைச் சொல்லி அரசருடைய பெரிய அரண்களைக் கோபித்தழிக்கும் செருக்கினையுடைய வலிய முயற்சியினையும் பெருமையினையுமுடைய நாற்படையினையும் மறத்தையுடைத்தாகிய வலியினையுமுடைய பாண்டியனது வலிகெடும்படி தன் செய்ய கண்ணாலே குற்றத்தைச் செய்து பார்த்துக் கோபித்துப் பெற்றவை மகிழ்தல் செய்யா (228) னென முன்னே கூட்டுக.
1.இருங்கோவேளென்பான் திதியன்முதலிய ஐம்பெருவேளிர்களுள் ஒருவன் ; மதுரைக். 128 - 9, ந.
|