பக்கம் எண் :

670
மருவினிய, கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப், பாலைகடாத்தொடும் பத்து" என்பதனால் இப்பெயர்களும் இவற்றின் முறையும் விளங்கும். இவை, மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் இயற்றிய உரையைப் பெற்றுள்ளன. அவ்வுரையினால் அதற்கு முன்பும் இவற்றிற்கு வேறுரை இருந்ததென்று தெரிகிறது.

இவற்றை இயற்றிய நல்லிசைப் புலவர்களின் பெயர்களும் பாட்டுடைத் தலைவர்களின் பெயர்களும் ஒவ்வொரு பாட்டின் இறுதியில் உள்ள பழைய வாக்கியங்களாற் புலப்படும். இவர்களின் வரலாற்றை இம்முகவுரையின் பின்னே காண்க. திருமுருகாற்றுப்படை நெடுநல்வாடையென்னு மிரண்டையும் இயற்றிய ஆசிரியர் நக்கீரர். பெரும்பாணாற்றுப்படை பட்டினப்பாலை யென்னுமிரண்டையும் இயற்றியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். பொருநராற்றுப்படை, பட்டினப்பாலையென்னும் இரண்டும் கரிகாலனையும், மதுரைக்காஞ்சி நெடுநல்வாடை யென்னுமிரண்டும் நெடுஞ்செழியனையும் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டவை. இவற்றைத் தொகுத்தோரும் சங்கப்புலவர்களே; இது மலைபடுகடாத்தில், "தீயி னன்ன வொண்செங் காந்தள்" (145) என்பதன் உரையில் நச்சினார்க்கினியர், ‘இவர்செய்த செய்யுளை நல்லிசைப் புலவர் செய்த ஏனைச்செய்யுட்களுடன் சங்கத்தார் கோவாமல் நீக்குவர்; அங்ஙனம் நீக்காது கோத்தற்குக் காரணம் ஆனந்தக் குற்றமென்பதொரு குற்றம் இச்செய்யுட்கு உறாமையானென் றுணர்க' என்று எழுதியுள்ள பகுதியால் விளங்கும்.

இவை, "ஆன்றோர் புகழ்ந்த வறிவினிற் றெரிந்து, சான்றோருரைத்த தண்டமிழ்த் தெரியல், ஒருபது பாட்டும்" (நச்சினார்க்கினியர் உரைச்சிறப்புப்பாயிரம்) என்று பாராட்டப் பெற்றுள்ளன. 1பாட்டும் தொகையும் கீழ்க்கணக்குமென்பதில் இவற்றை முன்வைத்து உரையாசிரியர்களும் பிறரும் எண்ணும் முறையே இவற்றின் அருமை பெருமையைப் புலப்படுத்தும்.

இவை 2பாட்டெனவும் 3பாவெனவும் வழங்கும்.

இவற்றுள், அகத்திணைக்குரியன முல்லை, குறிஞ்சி, பட்டினப்பாலையென்பன, ஏனையவை புறத்திணைக்குரியன. அவற்றுள் ஆற்றுப்படைகளாக உள்ளவை ஐந்து.


பாட்டியலிற் காணப்படுகின்றன. இவ்விலக்கணம் பத்துப்பாட்டைக் கண்டு பிற்காலத்தில் ஓராசிரியராற் கூறப்பட்டதாகத் தெரிகிறது; வேறு வகையான பத்துப்பாட்டுக்களின்மையும் இதனை வலியுறுத்தும்.

1 பாட்டினுந் தொகையினும் வருமாறு கண்டு கொள்க" (தொல், செய். சூ. 50, பேர்.); "மூத்தோர்கள், பாடி யருள்பத்துப் பாட்டுமெட்டுத்தொகையுங், கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்" தமிழ்விடு. 55-6.

2 தொல். செய். சூ. 50, பேர்.

3 சீகாளத்தி. நக்கீரச். 115.