பக்கம் எண் :

671
பத்துப்பாட்டு

ஆற்றுப்படை யென்பது கூத்தர் முதலியவர்களில் ஒருவர் ஒரு கொடையாளியின்பால் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர்வந்த இரவலர்களுக்கு அறிவுறுத்தி அவரும் அவன்பாற் சென்று தாம் பெற்றவற்றையெல்லாம் பெறுமாறு வழிப்படுத்தல்; ஆறு-வழி, படை - படுத்தல். ஒவ்வொருவரும் இங்ஙனம் கூறுதற்கு உரியோராயினும் கூத்தர் முதலியோரே எதிர்வந்த கூத்தர் முதலியவர்களுக்குக் கூறி அவர்களை வழிப்படுத்தியதாகச் செய்யுள் செய்தல் மரபு, தொல்காப்பியப் புறத்திணையியலில் 36-ஆம் சூத்திரத்திலுள்ள, "கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும், ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப், பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச், சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்" என்பது இதற்கு விதி; ‘ஆடன் மாந்தரும் பாடற் பாணரும் கருவிப்பொருநரும் இவருட் பெண்பாலாகிய விறலியுமென்னும் நாற்பாலாரும், தாம் பெற்ற பெஞ்செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச் சென்று தாம் பெற்றவையெல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடும்' என்பது இதன் பொருள். இங்ஙனம் இயற்றப் பெற்றவைகள் கூத்தராற்றுப்படை, பாணராற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை யென வழங்கும், பத்துப்பாட்டிலன்றி பதிற்றுப்பத்து, புறநானூறு, புறப்பொருள்வெண்பாமாலை முதலியவற்றிலும் பிற்காலத்து நூல்களாகிய கலம்பகங்களிலும் தனிப்பாடல்களிலும் இவ்வாற்றுப் படைகள் காணப்படுகின்றன. புலவராற்றுப்படை திருத்தணிகையாற்றுப்படை, திருப்பாணாற்றுப்படை முதலியன பெருங்கவிஞர்களாற் பிற்காலத்தில் இயற்றப்பெற்ற ஆற்றுப்படை நூல்களாகும்.

இந்தப் பத்துப்பாட்டினுள்:-

(1) திருமுருகாற்றுப்படை: இது புலவராற்றுப்படையெனவும் முருகெனவும் வழங்கும். இது 317 அடிகளுள்ள ஆசிரியப்பாவாலமைந்தது: பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்ட பிரபந்தங்களின் வரிசையிற் சேர்க்கப்பெற்றுள்ளது. முருகக் கடவுளுடைய திருவருளைப் பெற விரும்புவோர் இதனை நியமமாக அன்புடன் 1பாராயணம் பண்ணுதல் நலமென்றும் இது கண்கூடென்றும் பெரியோர் கூறுவர்.

"வளவாய்மை சொற்ப்ரபந்த முளகீர னுக்குகந்து மலர்வாயி லக்கணங்க ளியல்போதி, அடிமோனை சொற்கிணங்க வுலகாமுவப்பவென்றுனருளா லளிக்குகந்த பெரியோனே",

"நக்கீர ரோதிய வளமை சேர்தமி ழுக்காக நீடிய கரவோனே".

"கீதவிசை கூட்டி வேதமொழிசூட்டு கீரரிசை கேட்ட க்ருபைவேளே" (திருப்புகழ்,)


1 "நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற்றுப்படையைத், தற்கோல நாடோறுஞ் சாற்றினால் - முற்கோல, மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித், தாநினைத்த வெல்லாந் தரும்