"நக்கீரர் சொற்றித்தித்ததே" (கந்தரந்தாதி) என அருணகிரிநாதராலும், "இன்னன...... பாவுள், முன்னுற வந்து நிற்கு முருகாற்றுப்படை மொழிந்தான்" சீகாளத்திப் புராணம்) எனச் சிவப்பிரகாச ஸ்வாமிகளாலும், "தவிராத வெவ்வினை தவிர்க்குமுரு காறுந் தரித்தாறெழுத்தோதலாம்" (செய்யூர்ப் பிள்ளைத்தமிழ்) என அந்தகக்கவி வீரராகவ முதலியாராலும் இந்நூல் பாராட்டப்பெற்றிருத்தல் காண்க. ஒரு மலைக்குகையில் முன்னமே அடைக்கப்பட்டிருந்த தொளாயிரத்துத் தொண்ணுற்றொன்பதின்மரோடு சேர்த்துண்ணக் கருதித் தம்மையும் அக் குகையில் அடைத்துவிட்டு உண்ணுதற்கு நீராடப்போன ஒரு கொடிய பூதத்தை வெல்லக் கருதிய நக்கீரனார் முருகக் கடவுளைக் குறித்து இந்நூலைப்பாடி அப்பூதத்தினின்றும் விடுதல் பெற்றன ரென்பர். இவ்வரலாற்றைப் பற்றிய செய்திகள் திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், திருப்பரங்குன்றப் புராணம், சீகாளத்திப்புராணம் முதலியவற்றிற் சிலசில வேறுபாடுகளுடன் காணப்படுகின்றன. முருகக் கடவுள் நக்கீரனாரைச் சிறைமீட்டருளிய திருவிளையாடல் ஒவ்வோராண்டும் திருப்பரங்குன்றத்திலே பங்குனி மாதத்தில் நடக்கும் திருவிழாவில் நான்காந் திருநாளில் நடைபெற்று வருகின்றது. முருகாற்றுப்படை என்னுந்தொடர்மொழிக்கு, "வீடுபெறுதற்குச் சமைந்தானோர் இரவலனை வீடுபெற்றா னொருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்தது" என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். ஏனை ஆற்றுப்படைகளுக்கும் இதற்கும் வேறுபாடுகள் உண்டு; அவற்றிற் சில வருமாறு: பிற ஆற்றுப்படைகள் ஆற்றுப்படுத்தப்படுபவர்களது பெயரொடு சார்த்தி வழங்கப்படும்; இது பாட்டுடைத்தலைவன் பெயரொடு சார்ந்து வழங்கும். பிறவற்றிற் காணப்படுவனவாகிய, ஆற்றுப்படுத்தப்படுவானைவிளித்தலும், அவனது நிலையை விரித்தலும், ஆற்றுப்படுத்துவான் தனது பழையநிலை, பரிசில் பெற்ற முறையென்பவற்றைக் கூறுதலும் இதில் விளக்கப்படாமல் உய்த்துணர வைக்கப்பெற்றிருக்கின்றன. இது, முருகக்கடவுள் எழுந்தருளியிருக்கும் திருப்பரங்குன்றம் முதலாகிய ஆறுபடைவீடுகளைப் பாராட்டும் ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. முதற்பகுதியில், முருகக்கடவுளுடைய திருவுருவச்சிறப்பும், அவர் அணியும் மாலைவிசேடங்களும், சூரரமகளிர் செயல்களும், முருகக்கடவுள் சூரனைச் சங்காரஞ் செய்த விறலும், மதுரையின் பெருமையும், திருப்பரங்குன்றத்தின் இயற்கைவளனும் கூறப்பட்டுள்ளன. இரண்டாவது பகுதியில் முருகவேள் அடியார்க்கு அருள்புரிய எழுந்தருளும் யானையினது இயல்பும், அவருடைய ஆறு திருமுகங்களின் செயல்களும், அவற்றிற்கேற்பப் பன்னிரண்டு திருக்கரங்கள் ஆற்று |