பக்கம் எண் :

674
யும், கரிகாற் பெருவளத்தான் எளியாரையும் விரும்பி அவரை உபசரிக்கும் இயல்பும், உணவின் வேறுபாடுகளும், பரிசிலர்க்கு உபகாரிகள் தேர் யானை முதலியவற்றைக் கொடுக்கும் வழக்கமும், பொருநர் பொற்றாமரை பெறுதலும், விறலியர் பொன்னரிமாலைகள் பெறுதலும், கரிகாற் பெருவளத்தான் இளமையில் 1வெண்ணிப்பறந்தலையிற் போர் செய்து சேரபாண்டியர்களை வென்றமையும், திணைமயக்கமும், காவிரியின் பெருமையும் கூறப்பட்டுள்ளன.

3. சிறுபாணாற்றுப்படை: இது 269 அடிகளுள்ள ஆசிரியப்பாவாலமைந்தது; பரிசில் பெறக்கருதிய பாணனொருவனைப் பரிசில் பெற்றானொருவன் ஓய்மானாட்டு நல்லியக்கோடனிடத்தே ஆற்றுப்படுத்தியதாக அந்நல்லியக்கோடனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது. பாணர்-பாடுவோர்; இவர் இசைப்பாணரும் யாழ்ப்பாணரும் மண்டைப்பாணரு மெனப் பலராவர். இதிற் கூறப்படுபவன் யாழ்ப்பாணன். யாழ்ப்பாணர் சிறுபாணர் பெரும்பாணரென இருவகைப்படுவர். இவ்விருவரையும் ஆற்றுப்படுத்தின காரணம்பற்றி இப்பாட்டும் இதற்கடுத்த பாட்டும் முறையே சிறுபாணாற்றுப்படை, பெரும் பாணாற்றுப்படையெனப் பெயர் பெற்றன; பாட்டின் அடி அளவுபற்றி இப்பெயர் பெற்றன என்றுங் கொள்ளலாம்.

இச்சிறுபாணாற்றுப்படையில், ",இன்குரற் சீறியா ழிடவயிற்றழீஇ" (35) என்றும், பெரும்பாணாற்றுப்படையில், "இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பி" (462) என்றும் வரும் அடிகள் இவ்விரு வகைப் பாணர்களுக்கும் உள்ள வேறுபாடு யாழால் வந்ததாகக் கருத இடந்தருகின்றன.

இந்நூலை, "சிறப்புடைத்தான சிறுபாணற்றுப்படை" என்பர் தக்கயாகப்பரணி உரையாசிரியர்.

விறலியின் கேசாதிபாதம் கூறும் முகத்தால் அவள் உறுப்புக்களுக்கேற்ற உவமைகளும், வஞ்சி கொற்கை மதுரை உறந்தை யென்னும் தமிழ்நாட்டு முடிமன்னர்களுடைய இராசதானிகளின் பெருமைகளும், உமணர்களுடைய செயல்களும், ஏழு வள்ளல்களின் அருஞ்செயல்களும், நல்லியக்கோடனது வீரமும், பாணனுடைய வறுமைநிலையும், நெய்தல்நில இயல்பும், அதனைச் சார்ந்த எயிற்பட்டினத்தில் உள்ள நுளையர் வாழ்க்கை முறையும், முல்லைநில இயல்பும், அதைச் சார்ந்த 2வேலூரிலுள்ள எயிற்றியர் விருந்து பேணும் தன்மையும், மருதநில இயல்பும், அதனைச் சார்ந்த ஆமூரிலுள்ள உழவர்மகளிர் ஒழுகலாறும், அவர் விருந்தினரைப் பேணும் திறமும், நல்லியக் கோடனுடைய


1 இது தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ளது; தேவாரம் பெற்ற சிவ ஸ்தலங்களுளொன்று; இப்பொழுது கோவிலுண்ணியென்று வழங்கப்பெறும்.

2 உப்புவேலூர்.