நற்குணங்களும் வீரச்செயல்களும் வள்ளன்மையும், யாழின் வருணனையும், நல்லியக்கோடனைப் புகழும் முறையும், அவன் பாணனை உபசரித்துப் பரிசில் நல்கும் அருமையும் இதிற் காணப்படுகின்றன. 4. பெரும்பாணாற்றுப்படை: இது 500 அடிகளை உடைய ஆசிரியப் பாவாலாகியது; பரிசில் பெறுதற்குரிய பெரும்பாணன் ஒருவனைப் பரிசில் பெற்றானொருவன் காஞ்சிநகரத்திற் செங்கோல் செலுத்திக் கொண்டிருந்த தொண்டைமான் இளந்திரையனிடத்தே ஆற்றுப்படுத்தியதாக அவ்விளந்திரையனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது பெரும்பாணரென்பார் பாணருள் ஒருவகையினர். இப்பாட்டுள், "இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பி" (462) என வருதலால் இப்பாணர்க்குரியது பேரியாழென்று தெரிகிறது. இவ்வகையினர் பண்டைக்காலத்தில் மதுரையிலும் காவிரிப்பூம்பட்டினத்திலும் இருந்தனரென்று, "அழுந்துபட்டிருந்த பெரும்பாணிருக்கையும்" (மதுரைக்காஞ்சி, 342), "அரும்பெறன் மரபிற் பெரும்பா ணிருக்கையும்" (சிலப்.5:37) என்பவற்றால் தெரியவருகின்றது; "பெரும்பாண் காவல் பூண்டென" (நற். 40:3) என்ற செய்யுளிலும் பெரும்பாணென்னும் பெயர் வந்துள்ளது; அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரைத் 1திருத்தொண்டர் திருவந்தாதியில் நம்பியாண்டார் நம்பியும், பெரியபுராணத்திற் பலவிடங்களில் தொண்டர் சீர்பரவுவாரும் பெரும்பாணரென்று கூறியிருத்தல் அவரும் இவ்வகையினரெனக் கருத இடந்தருகின்றது. ‘பெரும்பாணராவார் குழலர் பாணர் முதலிய பெரிய இசைக்காரர்' என்பர், அடியார்க்கு நல்லார். பாணாறு எனவும் இப்பாட்டு வழங்கப்பெறும். யாழின் வருணனை, இளந்திரையன் நாட்டில் அவன் செங்கோன் முறையால் வழிப்போவாருக்கு விலங்குகள் முதலியவை துன்பஞ்செய்யாமை, உப்புவாணிகர் இயல்பு, கவர்த்தவழிகளைக் காப்பவர்தன்மை, எயிற்றியர் செயல், கானவர்தொழில், எயினரரண்களின் நிலை, வீரக்குடிமகள் இயல்பு, மறவர் வீரம், இடையர் குடியிருப்பின் தோற்றம், ஆய்மகள் செயல், இடையர் தன்மை, உழவர் குடியிருப்பின் அமைப்பு, உழுவார்செய்கை, மருத
1"நினையொப் பருந்திரு நீலகண்டப் பெரும் பாணனை " (திருத்தொண்டர் திருவந். 83); "நீடுசீர்த்திரு நீலகண்டப் பெரும்பாணர்", "திருநீல கண்டத்துப் பெரும்பாணர்". "பெரும்பாணர் வரவறிந்து பிள்ளையா ரெதிர்கொள்ள", "பிள்ளையா ரருள்பெற்ற பெரும்பாணர்", "அருட்பெரும் பாணனாரை", "மன்பெரும் பாண னாரு மாமறை பாட வல்லார், முன்பிருந் தியாழிற் கூடன் முதல்வரைப் பாடு கின்றார்" "நல்ல விசையாழ்ப் பெரும்பாணர்க், கானபடியாற் சிறப்பருளி", "பெரும்பாணர் மலர்த்தாள் வணங்கி" பெரிய. திருநீலநக்க, 24, திருஞான. 131 - 2, 138, திருநீலகண்ட. 3-4, 11- 2 |