பக்கம் எண் :

676
நிலத்தின் நிகழ்ச்சி, வலைஞர் குடியிருப்பின் இயல், அந்தணர் ஒழுக்கமுறை, அந்தணச் சாதி மகள் ஊறுகறி அமைக்கும் முறை, நீர்ப்பெயற்றென்னும் ஊரின் பெருமை, பரதர் தெருவில் நிகழ்வன, 1பட்டினத்தின் சிறப்பு, கலங்கரை விளக்கத்தின் மாண்பு, திருவெஃகாவில் திருமால் பள்ளிகொண்டருளியிருத்தல், காஞ்சி நகரின் சிறப்பு, இளந்திரையனுடைய வீரம் கொடை முதலியவற்றின் பெருமை, பேய்கள் வனதுர்க்கைக்குத் தம் பசிப்பிணியைக் கூறும் மரபு, பாணர் இளந்திரையனாற் பொற்றாமரை பெறுதல், விறலியர் அவனாற் பொன்மாலை, பெறுதல், அவன் பரிசிலரை உபசரிக்கும் முறை, அவன் மலையில் யானை குரங்கு முதலியன முனிவர்க்கு ஏவல் புரிதல் முதலியன இப்பாட்டால் அறியப்படும் செய்திகள்.

ஐந்திணைகளைப் பற்றிய வருணணைகளும், அவ்வத்திணையிலுள்ள பலவகைச் சாதியார் இயல்புகளும், அவர்கள் தத்தமக்கேற்றவாறு விருந்தினர்களை ஆதரிக்கும் முறையும், அந்தணர் முதலியோர் அன்போடு விருந்தூட்டும் தன்மையும் இப்பாட்டில் மிக அழகாகக் கூறப்பட்டிருக்கின்றன.

5. முல்லைப்பாட்டு:இது 103 அடிகளை உடைய ஆசிரியப்பாவாலமைந்தது; தலைமகன் போர் செய்தற்குப் பிரியக் கருதியதனைக் குறிப்பால் உணர்ந்து ஆற்றாளாய தலைவியது வாட்டத்தைக்கண்டு அவன் வற்புறுத்திச் செல்லவும் அவள் உடம்படாததை அறிந்த பெருமுது பெண்டிர், ‘அவன் வினைமுடித்து வருதல் உண்மை; நீ வருத்தம் நீங்குக' எனக் கூற, அதுகேட்டு அவள்பின் உளதாம் இல்வாழ்க்கைப் பயனை நினைந்து ஆற்றியிருந்தவழி, தலைவன் அக்காலத்தே போர் முடித்து வந்ததனைக்கண்டு தோழி முதலியோர் தம்முட் கூறியதாகக் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது. முல்லை யென்பது இல்லறம் நிகழ்த்துதற்குப் பிரிந்துவரும் துணையும் ஆற்றியிருவென்று கணவன் கூறிய சொல்லைப் பிழையாமல் ஆற்றியிருந்து இல்லறம் நிகழ்த்திய இயற்கையென்பர். ஆசிரியர் நச்சினார்க்கினியர்.

இந்நூல் 2முல்லையெனவும் வழங்கும். இப்பாட்டினால், பெருமுதுபெண்டிர் விரிச்சிபார்க்கும் வழக்கமும், பாசறையின் அமைப்பும், பாகர் யானைச்பேச்சான வடமொழிச்சொற்களைக்கூறி யானைகளுக்குக் கவள மருத்தும் வழக்கமும், பாசறையிலுள்ள பள்ளியறையின் இயல்பும், அங்கே நிகழும் நிகழ்ச்சிகளும் வீரமங்கையர் நாழிகை சொல்வார் மெய்காப்பாளர் என்பவர்களுடைய செயல்களும், தலைவன் பகைவரால் துன்புற்ற தன் படைகளின் வருத்தத்தை நினைந்து வருந்தும் அன்பின் திறனும், தலைவி தலைவனைக் காணாது துயருறுவதும், கார்காலத்திற் காட்டுவழியில் தோன்றும் காட்சிகளும் அறியப்படுகின்றன.


1 இதனை மகாபலிபுரமென நினைத்தற் கிடமுண்டு.

2 தக்க. 54,உரை.