6. மதுரைக்காஞ்சி: இது 782 அடிகளை உடையது; முதலிலும் இடையே சிலசிலவிடத்தும் வஞ்சியடிகள் வந்த ஆசிரியப்பாவாலாயது; தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு வீடுபேறு நிமித்தம் பலவகை நிலையாமையைச் செவியறிவுறுத்தற்கு மாங்குடிமருதனார் பாடியது. மதுரைக்காஞ்சியென்ற தொடரை மதுரையிடத்து அரசற்குக் கூறிய காஞ்சியென விரிப்பர். காஞ்சித்திணையென்பது வீடு பேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமையைச் சான்றோர் கூறும் குறிப்பினது. இப்பாட்டின் கண், "கொன்னொன்று கிளக்குவ லடுபோ ரண்ணல், கேட்டிசின் வாழி கெடுகநின் னவலம்" (207-8) என்பவற்றால் வீடுபேறாகிய நிமித்தத்தையும், "அன்னாய் நின்னொடு முன்னிலை யெவனோ" (206), "திரையிடு மணலினும் பலரே யுரைசெல, மலர்தலை யுலக மாண்டு கழிந்தோரே" (236-7) என்பது முதலியவற்றாற் பல்வேறு நிலையாமையையும் ஆசிரியர் புலப்படுத்தியிருத்தல் காண்க. பெரும்பான்மை வஞ்சியடிகளால் அமைந்திருத்தலின் இதனை வஞ்சிப்பாவின் தலையளவிற்கெல்லையாகக் காட்டினர். 1நச்சினார்க்கினியர். இந்நூலின்பெருமை, "பெருகு வளமதுரைக் காஞ்சி" என்பதனால் அறியப்படும். இதன் முற்பகுதியில் செங்கோலரசருடைய நாட்டிற் கோள்கள் பிறழாது வழங்குதல் முதலிய நன்னிகழ்ச்சிகள் உண்டாகுமென்பது கூறப்பட்டுள்ளது. நெடுஞ்செழியன் பகைவர்கள்மேற் படையெடுத்துச்சேறலும், அவர்கள் அரணங்களையும் காவன்மரங்களையும் அழித்தமையும், தன் ஏவல்கேட்பார்க்கு அருளிக்கேளாதவரை அழித்து அவர் நாடுகளைப்பாழாக்கிய முறைகளும், தலையாலங்கானத்துப் போர்செய்து சேர, சோழர்களையும் ஐந்து குறுநில மன்னர்களையும் வென்ற செய்தியும், சாலியூர் முதுவெள்ளிலை முதலிய ஊர்களைக் கைக்கொண்டதும், பரதவரை அடிப்படுத்தியதும், பகைவரை வென்று கொணர்ந்த பொருள்களை நட்டோருக்கும் புலவர் முதலியோருக்கும், தனக்கெனப்பாதுகாவாமல் வழங்கும் வண்மையும், பிறரைப் பணியாப் பெருவிறலும், முந்தையோர் அடி வழிப்பிழையாமூதறிவும், பொய்தவிர்ந்து வாய்மைமொழியும் பொற்பும், கொடுத்துப் புகழ்கொள்ளும் கொள்கையும், பிற அருங்குணங்களும் இந்நூலில் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இப்பகுதிகள் புறப்பொருட்டுறைகளுக்குரிய சிறந்த இலக்கியங்களாக விளங்குகின்றன. இது நச்சினார்க்கினியர் தம் உரையில் அங்கங்கே துறைகளை விளக்கிச் செல்வதனால் அறியப்படும். போர்புரிந்து பகைவரை வெல்வதையே கருதித் தன் வாழ்நாளிற் பெரும்பகுதியைக் கழித்த பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பல்வேறு நிலையாமையை அறிவுறுத்தப் புகுந்த ஆசிரியர் முதற்கண்ணே தம்
1 தொல். செய். சூ. 157, உரை. |