பக்கம் எண் :

678
கருத்தைப்புலப்படுத்தாமல் அவன் முன்னோருடைய நல்லியல்புகளையும் அவனுடைய கொடை வீரம், நற்குணம் முதலியவற்றையும் எடுத்துப்பாராட்டிப் புகழ்ந்து பின்பு தம் கருத்தைக் குறிப்பாகச் சில அடிகளாலே புலப்படுத்திப் பின்னர் மதுரையின் பெருவளத்தைப் பரக்கக் கூறியிருத்தல் அவரது 1உலகியலறிவையும் மன்னவர்களிடத்து ஒழுகும் முறையையும் புலப்படுத்துகின்றது.

பாண்டிநாட்டைப் புகழும் முகத்தால் அஃது ஐந்திணை வளங்களையும் உடையதென்பதும், அத்திணைகளில் ஒவ்வொன்றிலும் காணப்படும் காட்சிகளும் நிகழும் நிகழ்ச்சிகளும் மலிந்த ஓசை வகைகளும் முதல் கரு உரிப்பொருள்களின் அமைதிபெற மிகச் செவ்வனே கூறப்பட்டுள்ளன.

மதுரையின் பெருமையைக்கூறுகையில் முதலில் வையையாறு மதில் அகழி முதலியவற்றின் பெருமையும், அந்நகரின் நாளங்காடியின் வருணனையும், பின் அல்லங்காடியின் வருணனையும்

காணப்படுகின்றன.

நாளங்காடி வருணனையில் பண்டம் விற்பார், விழாவெடுப்பார், வெற்றியைப் புலப்படுத்துவார் முதலியோர்கள் எடுத்த பலவகைக் கொடிகளும் பிறவும் கூறப்பபடுகின்றன.

அல்லங்காடி வருணனையில், அந்தணர் இருக்கை முதலியவற்றின் அமைப்பும், காவிதிமாக்கள் அறங்கூறவையத்தார் முதலியோர் இயல்பும், பல்வகைப்பண்டம் விற்பாரைப்பற்றிய செய்திகளும் விளக்கப்பட்டிருக்கின்றன.

பின்னர், மதுரையிலுள்ளார் மாலைமுதல் நாட்காலை வரையிற் பொழுதுபோக்கும் முறை மிக விரிவாகக் கூறப்படுகின்றது. மாலைக்காலத்தில் மங்கையர் ஒழுக்கமும், பரத்தையர் இயல்பும், கருவுயிர்த்தவர் நீராடுதல் முதலிய செயலும், இராக்காலத்தில் கள்வர் செயலும், காவலர் காக்கும் திறனும், விடியற்காலத்தில் அந்தணர் முதலியோர் வேதமோதுதல் முதலியனவும் கூறப்படுகின்றன.

இப்பாட்டில் இடையிடையே சொல்லப்பட்ட நெடுஞ்செழியன் முன்னோர்களாகிய பாண்டிய மூவர். அவர்கள், முந்நீர் வடிம்பலம்ப நின்றபாண்டியன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, 2நிலந்தரு திருவிற்பாண்டியன் என்பார்.

மதுரையிற் கொண்டாடப்படுவனவாகக் கூறும் முறையிலும் உவமை கூறும் முறையிலும் திருப்பரங்குன்ற விழா, மதுரைக் கோயில்


1 சிலப்பதிகாரத்தில், செங்குட்டுவனை நோக்கி நன்னெறியறிவுறுத்தப் புகுந்த மாடலமறையவனார் முதலில் அவனை வாழ்த்தி, அவனுடைய முன்னோர் பெருமைமுதலியவற்றைக்கூறிப் பின்பு தாம் குறித்த நீதிகளை உலகியல்பறிந்து சொல்லும் முறையைப் புலப்படுத்தும், "மன்னவர் மன்னே" (28:112) என்பது முதலிய அடிகள் இங்கே கருதற்குரியன.

2 "நிலந்தரு திருவினெடியோன்" என்பதற்குத் திருமாலெனப் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.