பக்கம் எண் :

679
களில் நடைபெறும் விழா, அந்தி விழா, ஏழுநாள் நடைபெறும் விழா, திருவோண நாள் விழா, நன்னன் பிறந்தநாள் விழாவென்பன சொல்லப்படுகின்றன.

இதிற் கூறப்பட்ட ஊர்கள்: அழும்பில், மோகூர், மதுரை, சாலியூர், முதுவெள்ளிலை, கொற்கை, தலையாலங்கானம்.

முடிமன்னர் முதலியோர்: சேரசோழர், மானவிறல்வேள், நன்னன், பழையன், மாறன், ஐம்பெருவேளிர், நான்மொழிக் கோசர்.

இறுதியில் நெடுஞ்செழியன் நாட்காலையில் வீரர்களுக்கும் பாணர் முதலியவர்களுக்கும் களிறு முதலியவற்றை வழங்கும் நிகழ்ச்சியைக் கூறும் பகுதியில் வீரர்களாற்றிய பலவகை வீரச் செயல்கள் கூறப்படுகின்றன.

7. நெடுநல்வாடை: இது 188 அடிகளை உடைய ஆசிரியப்பா; பகைமேற் சென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு அவ்வருத்தம் தீரும்படி அவன் பகையை வென்று விரைவில் வருவானாகவென்று கொற்றவையைப் பரவுவாள் கூறியதாக அவனை நக்கீரனார் பாடியது.

இப்பெயர் நெடிதாகிய நல்லவாடையென விரிக்கப்படும். தலைவனைப் பிரிந்திருந்து வருந்துந் தலைவிக்கு ஒருபொழுது ஓரூழிபோல நெடிதாகியவாடையாய், அரசன் போகத்தில் மனமற்று வேற்றுப்புலத்துப் போந்திருக்கின்ற இருப்பாகலின் அவனுக்கு நல்லதாகிய வாடையாயினமையின் நெடு நல் வாடை யெனப்பட்டது. "கூதிர்ப்பானாள்" (12), "கூதிர் நின்றன்றாற்போதே" (72) என்பவற்றால் வாடைக்குரிய கூதிர்க்காலமும், "வடந்தைத் தண்வளி யெறிதொறு நுடங்கி" (173) என்பதனால், வாடையும், "புலம்பொடு வதியு நலங்கிள ரரிவைக், கின்னா வரும் படர் தீர" (166-7) என்பதனால் தலைவியின் நிலையும், "சிலரொடு திரிதரும் வேந்தன், பலரொடு முரணிய பாசறைத் தொழிலே" (187-8) என்பதனால் அரசன் பாசறையில் இருப்பதும், "இன்னே முடிகதில்லம்ம" (168) என்பதனாற் கொற்றவையைப்பரவுதலும் விளங்குகின்றன.

இஃது அகப்பொருட்கேற்ற செய்திகளைத் தன்பாற்கொண்டுள்ளதேனும், "வேம்புதலை யாத்த நோன்கா ழெஃகம்" (176) எனப் பாண்டியனது அடையாளப் பூவாகிய வேம்பைக்கூறினமையின் அகத்திணையின்பாற்படாது புறத்திணையாயிற்று. இதனை வாகைத்திணையுட் கூறிய கூதிர்ப்பாசறை யென்னும் துறையுள் அடக்குவர் நச்சினார்க்கினியர். வாகைத்திணை வெற்றியைக் குறிப்பது; இங்கே, போகம் நுகர்வார்க்குச் சிறந்த காலமாகிய கூதிர்க்காலத்து அப்போகத்தில் விருப்பின்றிப் பகைப்புலத்துப் போந்திருப்பதனால் பாண்டியன் காமத்திடத்து வெற்றியை யெய்தின காரணம்பற்றி வாகையாயிற்றென்பர்.

இதில், கூதிர்க்காலத்தில் மக்களும் விலங்கு பறவைகள் முதலியனவும் குளிரால் வருந்தியிருக்கும் நிலை முன்னர்க் கூறப்படுகின்றது.