பக்கம் எண் :

681
முறையே கூறப்பட்டுள்ளன. இஃது இத்தன்மையதாதலை, "தேற்ற, மறையோர் மணமெட்டி னைந்தா மணத்திற், குறையாக் குறிஞ்சிக்குணம்" (குறிஞ்சிப் பாட்டு, இறுதிவெண்பா) என்னும் செய்யுள் புலப்படுத்தும். ஐந்தாமணம் - காந்தருவம்; அதனிற் குறையாது ஒப்பதாவது களவு.

இதனுள் தலைவிக்கு விரகத்தால் உண்டாகிய வேறுபாடுகளும் தலைவனுடைய தோற்றத்தின் இயலும், தலைவியின் மேற் சென்று அச்சுறுத்திய தனது நாயைத் தலைவன் காத்தவாறும், களிறுதரு, புணர்ச்சி புனறரு புணர்ச்சி முதலிய துறையமைதிகளும், மாலைக்காலத்திற் பறவைகளும் விலங்கினமும் மக்களும் செய்யும் செயல்களும் கூறப்பட்டுள்ளன.

தலைவி தோழியுடன் நீராடிப் பல பூக்களைப் பறித்துப் பாறையிற் குவித்தாளென்ற செய்தியைக் கூறுகையில் 99 மலர்களின் பெயர்கள் சொல்லப்படுகின்றன.

தலைவி நாய்க்கு அஞ்சுகையில் தலைவன் காத்த செய்தியைக் கூறுமிடத்து, "மாறுபொரு தோட்டிய புகல்வின் வேறுபுலத், தாகாண்விடையினணிபெற வந்து" எனத் தலைவனுக்கு விடையை உவமையாகச் சொல்லிய ஆசிரியர் அதற்கேற்ப, தலைவியை அவளது ஊரளவும் கொணர்ந்து விட்டதைக் கூறுகையில், "துணைபுண ரேற்றி னெம்மொடு வந்து" என அவ்வுவமையையே பின்னும் சுவைபெறக் கூறியிருத்தல் அறிந்து இன்புறத் தக்கது. இதில், தலைவனது மலைவளங் கூறும் பகுதி உள்ளுறை யுவமப் பொருளமைய அமைந்துள்ளது.

தலைவன் தலைவியை வஞ்சினங் கூறித் தேற்றியதாகக் காணப்படும் பகுதியால், வரைந்துகொண்டு விருந்து புறந்தந்து இல்லறம் நிகழ்த்தும் முறையும், தலைவன் மலைமிசைக் கடவுளை வாழ்த்தி வஞ்சினங்கூறும் தன்மையும், நீர் குடித்தலாகிய சூளுறவும் அறியப்படுகின்றன.

இது குறிஞ்சிப்பாட்டாதலின், அகத்திணைக்குரிய கடவுளாகிய முருகனைப்பற்றிய செய்திகளை, "சுடர்ப்பூட் சேஎய், ஒன்னார்க் கேந்திய விலங்கிலை யெஃகின் மின்", "நெடுவே ளணங்குறு மகளிர்", "பிறங்குமலை மீமிசைக் கடவுள் வாழ்த்தி" என ஆசிரியர் எடுத்தாண்டுள்ளார்.

ஓரரசனுக்கு இது கூறப்பட்டதாதலின் அவனுக்கேற்ப, தோழியின் நிலையை, "இகன்மீக் கடவு மிருபெரு வேந்தர், வினையிடை நின்ற சான்றோர் போல" என விளக்கியும், நாய்களுக்கு உவமை கூறுகையில், "முனைபாழ் படுக்குந் துன்னருந் துப்பிற், பகைபுறங் கண்ட பல்வேலிளைஞரின்" எனச் சொல்லியும், மாலைக்காலம் பலவகை நிகழ்ச்சிகளை முன்னிட்டுக் கொண்டு வருதலை, "சினைஇய வேந்தன் செல்சமங் கடுப்பத், துனைஇய மாலை துன்னுதல் காணூஉ" என உவமைகொண்டு அறிவித்தும் அரசர்களையும் வீரர்களையும் பற்றிய செய்திகளை ஆசிரியர் எடுத்தாண்டமை பாராட்டற்பாலதாம்.

9. பட்டினப்பாலை: இது 301 அடிகளை உடையது; பெரும்பான்மையும் வஞ்சியடிகளாலமைந்து ஆசிரியவடிகளால் இறுவது; வேற்று