பக்கம் எண் :

683
சாலை, தவப்பள்ளி, துர்க்கையின் கோயில் முதலியவற்றின் இயல்புகளும், பின்பு பரதவர் பகலிலும் இரவிலும் பொழுதுபோக்கும் முறையைக் கூறும் பகுதியில் பரதவர் குடில்களின் தோற்றமும், அவர்கள் சுறாக்கொம்பை நட்டு வருணனை வழிபடும் மரபும், உவாக்காலத்தில் மீன் வேட்டைக்குச் செல்லாத வழக்கமும், தீவினை நீங்கக் கடலாடும் இயல்பும், கடலிற் சென்ற பரதவர் கரையிலுள்ள வீடுகளில் ஏற்றிய விளக்குக்களை எண்ணும் செயலும் காணப்படுகின்றன.

பரதவர் தெருவைப்பற்றிய செய்திகள் பின்பு கூறப்படுகின்றன. இப்பகுதியால், காவிரிப்பூம்பட்டினத்தில் கடல்வாணிகம் நிகழ்ந்து வந்ததென்பதும், ஏற்றுமதி இறக்குமதியாகும் பண்டங்களில் சோழனுடைய அடையாளமாகிய

புலிப்பொறியைப் பொறித்துவந்தனரென்பதும், அவற்றிற்குச் சுங்கம் வாங்கி வந்தார்களென்பதும், அச்சுங்கப் பொருளைத் தொகுப்பார் அரசன் மாட்டு அன்புடையராகித் தம் கடமையைக் குறைவின்றி நிறைவேற்றி வந்தனரென்பதும் அறியப்படுகின்றன. இவ்வாறு கப்பல் வியாபாரம் நடந்தமையாற் பல நாட்டிற்கும் சோழநாட்டுப் பொருள்கள் சென்றன வென்பதும், ஈழம் காழகம் முதலிய நாடுகளிலிருந்து பல பொருள்கள் சோழ நாட்டிற்கு வந்தன வென்பதும், தெரிகின்றன.

அப்பால் காவிரிப்பூம்பட்டினத்து ஆவணத்தின் வளம் கூறப்படுகிறது. இப்பகுதியில், கோயில்களில் எடுத்தகொடியும், பண்டங்களை விற்றற்குத் தூக்கிய கொடியும், கற்றறிந்த ஆசிரியர்கள் வாதுகருதிக்கட்டிய கொடியும், கட்கடையில் உள்ள கொடியும் சொல்லப்படுகின்றன.

பிறகு இமயம், குடகு, தென்கடல், மேல்கடல், கங்கை, காவிரி, ஈழம், காழகம் முதலிய இடங்களிலிருந்து வந்த பொருள்கள் கூறப்படுகின்றன. அதன் பின்பு வணிகர் இயல்பு சொல்லப்படுகின்றது. அவர்கள் கொலை களவு முதலிய குற்றங்களைப் பிறரிடமிருந்து நீக்கும் செயலையும், தேவர் பசு அந்தணர் முதலியோரை வழிபட்டு வந்ததையும், அவர்களது நடுவு நிலைமையையும், வாணிக முறையையும் இப்பகுதி விளக்குகின்றது.

பின்னர், கரிகாலன் இளமையில் சிறையில் இருந்தமையும், அச்சிறையினின்றும் நீங்கி அரசுரிமையை எய்தினமையும், பகைவர் நாட்டைப் பாழ்படுத்திய முறையும், ஒளியர் அருவாளர் வடவர் குடவர் பொதுவர் இருங்கோவேள் முதலிய சிற்றரசர்களையும் பாண்டியரையும் வென்றமையும், உறையூரை விரிவுற அமைத்து அதிற் பல குடிகளை நிலைநிறுத்தி மதில் வாயில்கள் முதலியன அமைத்தமையும் சொல்லப்படுகின்றன.


தீர்த்தமுமாமென்று சில பெரியோர் கூறுவர். முற்காலத்தில் திருவெண்காடு காவிரிப்பூம்பட்டினத்தின் எல்லைக்குள் அடங்கியிருந்ததாகத் தெரிவதால் இது சரியெனவே தோற்றுகின்றது.