பக்கம் எண் :

684

கரிகாலனாற் பாழ்பட்ட பகைவர் நாடுகளைப் பற்றிக் கூறும் பகுதியில் அந்நாட்டின் பழைய நிலை மிக அழகாகவும் பாழாயினபின் அடைந்த நிலை இரக்கத்தை உண்டாக்கும் முறையிலும் விளக்கப்பட்டிருக்கின்றன.

10, மலைபடுகடாம்: இது, 583 அடிகளை உடைய ஆசிரியப்பாவாலாகியது; பரிசில் பெறவரும் கூத்தனொருவனைப் பரிசில் பெற்றானொருவன் செங்கண்மாத்து வேள் நன்னன்சேய் நன்னனிடத்தே ஆற்றுப் படுத்தியதாக அந்நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது. இது கூத்தராற்றுப்படையெனவும் வழங்கும்; கூத்தர்-ஆடன் மாக்கள். இவர்களுக்குச் சாதி வரையறை இலது. இவர்கள் எண்வகைச் சுவையும் மனத்தின்கட்பட்ட குறிப்புக்களும் புறத்துப் புலப்பட ஆடுவோர். "கலம்பெறு கண்ணுளரொக்கற்றலைவ" (50) என்ற விளியினால் இது கூத்தரை ஆற்றுப்படுத்தியதென்பது அறியப்படும்.

"அலகைக் தவிர்த்தவெண்ணருந் திறத்த, மலைபடு கடாஅ மாதிரத்தியம்ப" (347 - 8) என்ற அடிகளால் மலைக்கு யானையை உவமித்து அதன்கட்பிறந்த ஓசையைக் கடாமெனச் சிறப்பித்தவதனால் இப்பாட்டு மலைபடுகடாமென்று பெயர் பெற்றது. கடாமென்பது ஆகுபெயராய் அதனாற் பிறந்த ஓசையை உணர்த்திற்று. இவ்வாறு ஒரு பாட்டிலுள்ள பொருட் சிறப்புடைய தொடரால் அப்பாட்டின் பெயரைக் குறித்தலுண்டென்பது பதிற்றுப்பத்தினாலும் உணரப்படுகின்றது.

பரந்த மொழியால் அடிநிமிர்ந்து வந்த தோலென்னும் வனப்பிற்கு இப்பாட்டு உதாரணமாக இளம்பூரணராலும் ஆசிரியப்பாவின் தலையளவிற்கு எல்லையாக நச்சினார்க்கினியராலும் எடுத்துக்காட்டப்பெற்றிருக்கின்றது.

இதில், பலவகை இசைக் கருவிகளின் பெயர்களும், யாழின் வருணனையும், மலைச்சாரலின் வளமும், அச்சாரலில் வாழும் குறவர்களும் காடுகாக்கும் வேடர்களும் வருவோரை விருந்தூட்டி உபசரிக்கும் இயல்பும், மலைப்பக்கத்தில் நிகழும் பலவகை ஓசைகளைப்பற்றிய செய்திகளும், கோவலரும் நாடுகாக்கும் வேடரும் உழவர்களும் தம்பால் வருவோரை உபசரிக்கும் திறமும், நன்னனது ஊரின் பெருமையும், அவன் அரண்மனை வாயிலில் அவனது காட்சியைக் கருதிநிற்பார் கொண்டுவந்த கையுறை வகைகளும், அவனைப் புகழும் முறையும், அவன் தன்பால் வந்த கூத்தர் விறலியர் முதலியோருக்குப் பரிசில் நல்கி விடுக்கும் வண்மையும் கூறப்படுகின்றன.

இடையிடையே அவ்விடங்களிலுள்ளார் தத்தமக்கேற்றவாறு உதவும் உணவு வகைகளும், இடைவழியில் வழிச்செல்வார்க்கு நிகழும் இடையூறுகளும், அவற்றை நீக்கிக்கொண்டு செல்லும் உபாயமும் மிக விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன.

நன்னனுக்குரிய நவிரமலையில் உள்ள காரியுண்டிக் கடவுளது கோயிலைப்பற்றிய செய்திகளும் சேயாற்றின் பெருமையும் இதிற் காணப்