பக்கம் எண் :

685
படும். "குன்றுசூ ழிருக்கை நாடுகிழ வோனே" (584) என்பதனால் நன்னனுடைய ஊரமைந்துள்ள பல்குன்றக் கோட்டம் சொல்லப்பட்டிருக்கிறது.

வரகின் கவைக்கதிருக்கு வாதியின் கையை உவமை கூறி யிருத்தலும், குறமகளிர் தம் கணவர் புண்ணாற்படும் வருத்தத்தைப் பாட்டுப் பாடித் தணித்தலும், யானையைக் கந்திற் பிணிக்கும் பாகர் யானைப் பேச்சான சில வடமொழிகளைப் பயிற்றும் வழக்கமும். வழிக்கு அடையாளமாகக் கவர்த்த வழிகளின் தொடக்கத்தில் புல்லை முடிந்து வைத்தலும், கற்புக்குக் கொடியுண்மையும், பாணருக்குப் பொற்றாமரைப் பூவையும் விறலியருக்கு இழைகளையும் உபகாரிகள் அளித்தலும் பிறவுமாகிய செய்திகள் இதனால் அறிதற்பாலன.

இன்ன இன்ன செய்திகளைக் கூறுவேன் கேளெனத் தொகுத்துச் சுட்டிப் பின்பு விரிக்கும் முறை இவ்வாற்றுப்படையில் மட்டும் காணப்படுகின்றது.

கூத்தனை ஆற்றுப்படுத்துகையில், இன்ன இன்ன இடங்களில் இன்ன இன்ன செயல்களைச் செய்கவெனக் குறிப்பிடுகையில், "நறுங்காரடுக்கத்துக் குறிஞ்சி பாடி" (359) எனவும், "எருதெறி களம ரோதையொடு நல்யாழ், மருதம் பண்ணி யசையினிர் கழிமின்" (469-70) எனவும் அவ்வத்திணைக்கேற்ற பண்களைப் பாடுமாறு சொல்லப்படுதல் அறிந்து மகிழத்தக்கது.

ஆங்காங்கு ஆசிரியர் பலவகை உவமைகளைக் கூறிப் பொருளை விளக்கிச் செல்கின்றார். அவற்றுள், கூத்தருக்குத் தக்கபடி, "விரலூன்றுபடிக ணாகுளி கடுப்பக், குடிஞை யிரட்டு நெடுமலை யடுக்கம்"(140-41) எனவும், "சுரஞ்செல்கோடியர் முழவிற் றூங்கி, முரஞ்சுகொண்டிறைஞ்சின வலங்குசினைப் பலவே" (143-4) எனவும், "கானப்பலவின் முழவுமருள் பெரும்பழம்" (511)எனவும். "வராஅற், றுடிக்க ணன்ன குறையொடு" (457-8) எனவும் ஆகுளி முழவு துடியென்னும் இசைக்கருவிகளையும், "கோளி யாலத்துக், கூடியத் தன்ன குரல்புணர் புள்ளின்" (268-9)எனவும், "அருவி நுகரும் வானர மகளிர், வருவிசை தவிராது வாங்குபு குடைதொறுந், தெரியிமிழ் கொண்டநும் மியம்போ லின்னிசை" (294-6) எனவும் இசைக்கருவிகளின் ஓசையையும், நுகர் பொருள்கள் ஒன்றையொன்றொவ்வா இனிமையையுடையன வென்பதைப் புலப்படுத்துவாராய், "நல்லியாழ்ப், பண்ணுப் பெயர்த்தன்ன காவும் பள்ளியும்" (450-51) அவற்றிற்கு ஒன்றையொன்றொவ்வா இனிமையையுடையனவாகிய பண்களையும், "கடும்பறைக் கோடியர் மகாஅ ரன்ன, நெடுங்கழைக் கொம்பர்க் கடுவ னுகளினும்" (236-7) எனக் கூத்தர் பிள்ளைகளையும், நன்னன் மலையில் உள்ள ஆரவாரத்தையும் பிறவற்றையும் கூறியபின்பு அம்மலையைச் சிறப்பிப்பாராய், "முழுவுத்துயி லறியாவியலு ளாங்கண், விழவி னற்றவன் வியன்கண் வெற்பே" (350-51)