பக்கம் எண் :

686
எனக் கூத்தர்கள் தொக்குத் தம் வன்மையைக்காட்டும் விழாவையும் உவமையாக எடுத்தாண்டிருத்தல் ஆசிரியருடைய பேரறிவாற்றலைப் புலப்படுத்திப் படிப்போரை இன்புறுத்துகின்றது.

சீவகசிந்தாமணியை யான் முதன்முறை பதிப்பித்து வந்த பொழுது நச்சினார்க்கினியர், தம் உரையிற் காட்டும் மேற்கோள்களுக்குப் பின் அவற்றின் இடத்தை உணர்த்தாமல், ‘என்றார் பிறரும்' என எழுதிச் செல்லுவதை யறிந்து அவற்றிற்கு ஆகரங்களைத் தெரிந்து கொள்ள நினைந்து பழைய ஏட்டுச்சுவடிகளைப் படித்துப் பார்த்து வந்தேன். திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவானும் என்னுடைய தமிழாசிரியருமான திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் ஏட்டுச்சுவடிகளுள் ஒன்றிற் பொருநராற்றுப்படை யென்ற பெயர் இருத்தலையறிந்து அதனையெடுத்துப் படித்து வருகையில் சில பகுதிகள் சீவகசிந்தாமணி உரையில் மேற்கோளாகக் காட்டப்பெற்றனவாக இருந்தன. அதனால் ஊக்கம் கொண்டு மேலும் படித்து வருகையில், மதுரைக் காஞ்சி வரையில் அப்பிரதியிலிருந்தமையின் பல மேற்கோட் பகுதிகள் அவற்றிற் காணப்பட்டன; " முருகு பொருநாறு" என்னும் பழைய வெண்பாவிற் கூறப்பெற்ற நூற்பெயர்களிற் சிலவும் அவற்றின் முறையும் அமைந்திருந்தமை கண்டு அவை பத்துப்பாட்டைச் சார்ந்தன வென்றறிந்தேன். நச்சினார்க்கினியர் உரைச்சிறப்புப்பாயிரத்துள்ள, "சான்றோருரைத்த தண்டமிழ்த் தெரியல், ஒருபது பாட்டும்" என்னும் பகுதியினால் பத்துப்பாட்டிற்கு நச்சினார்க்கினியருரையுண்டென்பதை முன்பே அறிந்திருந்தேனாதலின் அப்பிரதியிலுள்ளது அவருரையென்று தெரிந்துகொண்டேன். அதன் பிறகு, பத்துப்பாட்டுக்களை நச்சினார்க்கினியர் உரையுடன் ஆராய்ந்து வெளியிடவேண்டுமென்னும் எண்ணத்தால் பார்த்தியவவூ(1883)முதல் ஏட்டுப் பிரதிகளைத் தேடி வந்தேன். இயற்றமிழாசிரியர் திருத்தணிகை ஸ்ரீவிசாகப்பெருமாளையரவர்களுடைய மருகர், வேலூர் ஸ்ரீ குமாரசாமி ஐயரென்பவர் ஒரு பிரதி தந்தார். அதில் பொருநராற்றுப்படை முதல் மலைபடுகடாமிறுதியாக உள்ள பாட்டுக்கள் ஒன்பதும் இருந்தன. பிள்ளையவர்கள் பிரதியிலும் அப்பிரதியிலும் உள்ள பாட்டுக்களுள் ஒன்றிற்கேனும் முலம் கிடைக்கவில்லை. பாராயணநூலாக இருந்தமையால், திருமுருகாற்றுப்படைமட்டும் பல இடங்களிற் காணப்பட்டது. ஆதலின், முற்கூறிய இரண்டு பிரதிகளிலும் உரைக்கு முன்னம் சிறிது சிறிது ஒரு மொழியும் தொடர்மொழியுமாக அமைந்திருந்த மூல பதங்களையே யிணைத்து எனது சிற்றறிவிற்கு எட்டிய மட்டும் அடிவரையறைசெய்து அவ்வொன்பது பாட்டையும் எழுதிக்கொண்டேன்; உரையாசிரியர்களால் இவற்றிலிருந்து பழைய இலக்கிய இலக்கண உரைகளில் மேற்கோளாக எழுதப்பட்டவற்றுள் கிடைத்த சில பகுதிகள் இவற்றின் மூலங்களை இணைக்குங்காலத்துப் பேருதவியாக இருந்தன. இவ்வாறு உரையிலிருந்து மூலங்களைக் கண்டுபிடித்துத் தொகுத்தது அளவிறந்த துன்பத்தை உண்டாக்கிவிட்டது.