பின்பு, 1918-ஆம் வருடம் இரண்டாவது பதிப்பு வெளியிடப்பட்டது. அப்பதிப்பிற்கு உதவியாகக் களக்காடு ஸ்ரீ சாமிநாத தேசிகரவர்களால் ஒரு கையெழுத்து மூலப்பிரதியும், சில உரைப் பிரதிகளும் கிடைத்தன; அவற்றாலும் நாளடைவிற் செய்துவந்த ஆராய்ச்சிகளாலும் பத்துப்பாட்டின் மூலமும் உரையும் சில சில திருத்தங்களை அடைந்தன. உரையாசிரியர்களால் இப்பாட்டுக்களிலிருந்து மேற்கோள்களாக எடுத்தாளப்பட்டிருக்கும் பகுதிகளையும் இடங்களையும் ஞாபகத்துக்கு வந்த அளவு விளக்கியும், திருமுருகாற்றுப் படைக்குமட்டும் வேறுரையொன்று கிடைக்காமையால் அதிற்காணப்பட்ட விசேடமான வேறுபாடுள்ள பகுதிகளையும் பாட பேதங்களையும் அதனுரையில் அங்கங்கே கீழ்க் குறிப்பாகப் புலப்படுத்தியும், மூலத்திற்குரிய அடியெண்களை உரைப்பகுதியில் உரிய இடங்களில் அமைத்தும், உரையிலுள்ள அருஞ்சொற்களுக்குப் பொருளும் விளக்கமும் எழுதியும், உரையிற் சொற்களின் முதலிறுதிகள் தோன்றப் பிரித்துக்காட்டியதன்றி மையீற்றுப் பண்புப் பெயர்களுள் நிச்சயமாகத் தெரிந்த முதனிலையைப் புலப்படுத்தியும், பழைய நூல்களைப் போலவே பழைய உரைநடைகளும் சிறந்து பயன்படுவனவாதலின் உரைநடையிற்கண்ட சொற்கள் முதலியவற்றைத் தொகுத்து அகராதியாக அமைத்து விளங்காத சொற்களுட் பெரும்பாலனவற்றிற்குப் பொருளெழுதிச் சேர்த்தும், பாடினோர் பாடப்பட்டோர் உரையாசிரியர் வரலாறுகளைத் தெரிந்த அளவு எழுதியும் அவ்வக் காலங்களில் சென்னைச் சருவகலாசங்கத்தார் B. A. பரீக்ஷைக்கு இப்பாட்டுக்களில் ஒவ்வொன்றைப் பாடமாக வைத்தபொழுது பதிப்பித்தவற்றிற்கு எழுதிய குறிப்புக்களைச் சேர்த்தும் இரண்டாம் பதிப்பு வெளியிடப் பெற்றது. முதலிரண்டு பதிப்புக்களைப் பற்றிய பிறசெய்திகளை அவ்வப் பதிப்புப் புத்தகங்களின் முகவுரைகளால் அறிந்து கொள்ளலாம்; இங்கே விரிவஞ்சி அவை விடுக்கப்பட்டன. இப்பொழுது இது மூன்றாம் முறையாகப் பதிப்பிக்கலாயிற்று. பின்னர்ச் செய்துவந்த ஆராய்ச்சியால் மூலமும் உரையும் அடைந்த திருத்தங்கள் சில. வேறு நூல்களிலிருந்து மூலத்துக்கு நேரான ஒப்புமைப்பகுதிகளும் நச்சினார்க்கினியரும் பிறரும் எழுதிய உரைகளிலிருந்து உரைகளை ஒத்த பகுதிகளும் இப்பதிப்பில் முன்னைய பதிப்பினிலும் அதிகமாகக் காட்டப்பட்டுள்ளன. அவ்வகையில் புதியனவாகக் காட்டப்பட்ட சில பழைய நூல்கள்: பழைய இலக்கண நூலொன்று, கண்டனலங்காரம், கிளவித் தெளிவு, கிளவிமாலை, கிளவி விளக்கம், தமிழ்நெறி விளக்கம், பல்சந்த மாலை, பாண்டிக் கோவை, பொருளியல், வங்கர்கோவை. இரண்டாவது பதிப்பில் இருந்த மூன்றுவித அகராதிகளும் சிலபயன்கருதி ஒரே அகராதியாகத் தொகுத்து இப்பதிப்பில் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவ்வகராதியில் இந்நூலில் காணப்படும் உவமைகள், அருஞ்செய்திகள் முதலியவற்றிற் பல நூதனமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. |