பக்கம் எண் :

695
காரியைக் கண்டு அவனது பெருவண்மையைச் சிறப்பித்தனர்; வையாவிக்கோப் பெரும்பேகனென்னும் வள்ளல் தன் மனைவியாகிய கண்ணகியென்பவளைத் துறந்திருந்தானாதலின் அவள் காரணமாக அவனைப் பாடினார்.

பாரியின் மகளிர் மணம்பெறும் பருவம் அடைந்தகாலத்தில் தமிழ் நாட்டு மூவேந்தர்களுள் ஒவ்வொருவரும் அம்மகளிரை மணஞ்செய்து கொள்ள விரும்பி வேள்பாரிக்கு அக்கருத்தை யறிவித்தார்களாக, அவன் அவ்வாறு கொடுக்க மறுத்தனன். மறுக்கவே மூவேந்தரும் அவனது பறம்பு மலையைச் சூழ்ந்துகொண்டு போர்செய்தனர், அக்காலத்து இவர் அவர்களை நோக்கி, "பாரியது பறம்புமலை கைக்கொள்வதற்கு எளியதென்றும் பாரி எளிதில் வெல்லப்படுவானென்றும் எண்ணன்மின். அவனுடைய மலை இன்றியமையாத பொருள்களை யீவது. நெடுங்காலம் நீவிர் இக்குன்றை முற்றியிருப்பினும் இங்கே உண்டாகும் நெல், பழம், கிழங்கு, தேன் முதலியனவும், உங்களாலறிதற்கரியனவாகிய சுனைகளில் உள்ள நீரும் எங்களுக்குப் போதியனவாதலின் யாதோர் இடையூறும் வாராது. அவனுடைய பறம்புநாடு முந்நூறு ஊர்களே உடையது. அவற்றையெல்லாம் பரிசிலர் பெற்றனர். எஞ்சியிருப்பது இக்குன்று ஒன்றே. யானும் பாரியும் இருக்கின்றோம். நீவிர் இக்குன்றையேனும் எம்மையேனும் கொள்ள நினைப்பிற் பாரியைப் பாடிக்கொண்டு பரிசிலராக வரிற்கொள்ளலாம்" எனப்பாடினார். அம்மூவரும் பலநாள் உள்ளே உணவுப்பொருள் வாராதபடி பறம்பை முற்றியிருந்தனர். அப்பொழுது கபிலர் சில கிளிகளையும் குருவிகளையும் பழக்கி அவற்றைக் காலையில் வெளியே பறக்கவிட்டுப் பலவிளைபுலங்களிற் சென்று நெற்கதிர்களைக் கொண்டு மாலையில் வரும்படி செய்வார். இச் செய்தி நக்கீரர் பாட்டாலும் ஒளவையார் பாட்டாலும் (அகநா.78, 303) புலப்படுகின்றது. பின்பு, பறம்புமலையைப் பகைவர்கள் கைக்கொண்டார்கள்; பாரியும் உயிர் நீத்தான், அப்பொழுது இவர், அவன் மகளிரைத் தக்காருக்கு மணம் புரிவிக்க வேண்டுமென்றெண்ணி உடனழைத்துச் சென்றார். செல்லுங்காலையிற் பாரியின் பிரிவாற்றாமையால் மிக வருந்தி, அவனுடைய நற்குணங்களையும் கொடைத் திறத்தினையும் செங்கோற் செவ்வியினையும் நினைந்து நினைந்து இரங்கி, அவனது பறம்புமலையின் பழையவளத்தையும் பின்பு பகைவர்களால் அழகிழந்ததையும் பறம்புநாட்டின் வளத்தையும் எண்ணி நெஞ்சுருகிப் பல செய்யுட்களைப் பாடினர். மணல் நிறைந்த இடமொன்றில் நடந்து போகையில் பாரிமகளிர் அங்கே சென்ற உமணர் உப்புவண்டிகளை நோக்கிக் கொண்டிருந்த பொழுது, "தமது மலையைச் சூழ்ந்த அரசர்களுடைய குதிரை முதலியவற்றை மலைமேல் நின்று எண்ணிய இவர்கள் உப்பு வண்டிகளை ஈந்திலை நிறைந்த குப்பையில் நின்று எண்ணும்படியாயிற்றே" எனச் சொல்லி வருந்தினார். பின்னர், பாரிமகளிரை அந்தணர்பால் ஒப்பித்து மலைநாட்டிற்குப்போய்ச் செல்வக்கடுங்கோ வாழியாதனை அடைந்து, "நீ பாரிபாலுள்ள குணங்களை