யுடையா யென்பதை அறிந்தே உன்னைப் பார்க்க வந்தேன்" எனக்கூறி அவன் செய்த வேள்வி, அவனது கொடை, வென்றி முதலியவற்றைப் பாராட்டிப் பத்துச் செய்யுட்களைப்பாடி அவன் வலிந்து தந்த பரிசிலைப் பெற்றனர். அப்பரிசில்: "சிறு புறமென நூறாயிரங் காணங்கொடுத்து நன்றாவென்னுங் குன்றேறி நின்று தன் கண்ணிற்கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ" (பதிற். ஏழாம்பத்தின் பதிகம்) என்பதனால் விளங்கும். பின்பு பாரிமகளிரோடு விச்சிக்கோவென்னும் குறுநில மன்னனிடம் சென்று அவரை மணந்து கொள்ளுமாறு வேண்டினர். அவன் மறுக்க, எவ்வியென்னும் மன்னனுடைய வழித்தோன்றலும் புலி கடிமால் மரபிலுள்ளவனுமாகிய இருங்கோவேளென்பானிடம் சென்று பாரிமகளிரைக் கொள்ளுமாறு அவனை மிகவும் வேண்டினர். அவனும் மறுத்தானாக, புலவர்களை இகழ்வதனால் உண்டாகும் துன்பத்தை அவனுக்கு ஒரு சரித்திர வாயிலாக அறிவுறுத்தி ஒரு செய்யுள் கூறினார். பின்னர், அம்மகளிரை மீண்டும் அந்தணரிடத்தே விட்டுவிட்டு, பாரியினது பிரிவை ஆற்றவொண்ணாராய் வடக்கிருந்தனர். அப்பொழுது, "வளம்பொருந்திய நாட்டையுடைய பாரியே! பெரிய வண்மையையுடையாய் நீ பல யாண்டுகள் என்னோடு பொருந்தி நட்பினனாக ஒழுகினை; பல உதவிகளைச் செய்தாய். எனினும் அந்நட்பிற்கு மாறாக இவ்வுலகத்தில் என்னை விட்டுவிட்டு நீ தனித்துச் சென்றனை. நீ முன்பு ஒழுகியதும் உதவியதும் மனத்தொடு பொருந்தியவையல்ல போலும்; என்னை அக்காலத்து வெறுத்திருந்தாய் போலும்; இல்லையெனின் என்னைப்பிரிய உனக்கு மனம் வருமோ? அவ்வாறு நினக்குப் பொருந்தினேனல்லேனெனினும் இப்பிறப்பில் நீயும் நானும் அளவளாவி மகிழ்ந்திருந்தவாறு மறுப்பிறப்பிலும் இடைவிடாது நின்னோடு வாழ்தலை விதிகூட்டுவதாக" எனக் கரைந்து புலம்பினார். 1திருக்கோவலூர்ச் சாஸனமொன்றால் இவர் பாரிமகளிரை மலையனுக்கீந்து பெண்ணையாற்றங்கரையில் வளர்த்த கனலிற் புகுந்தனரென்று தெரிகின்றது. அவ்விடத்திலே `கபிலக்கல்' என்று ஒருகல் இருப்பதாகவும் அச்சாஸனம் கூறும். ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழறிவித்தற்கே இக்குறிஞ்சிப்பாட்டை இவர் இயற்றினர். பழைய இலக்கணவுரைகளில், 'கபில பரணர்' என்று வழங்குகிற தொகை நிலைத் தொடராலும், தொகை நூல்களிலும் பிறவற்றிலும் பலவிடங்களில் இவரது பாட்டிற்குப் பின் பரணர்பாட்டு அமைந்திருப்பதனாலும் பரணரென்பவருக்கும், திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணத்தில் வந்துள்ள, "பின்னமில் கபிலன் றோழன் பெயரிடைக்காடனென்போன்"(20:1) என்னும் திருவிருத்தத்தால் இடைக்காடனாருக்
1இந்தச்சாஸனம், ஸ்ரீ. து. அ. கோபிநாதராவ் அவர்களால் செந்தமிழ், தொகுதி, 4, 232-ஆம் பக்கம் முதலியவற்றில் வெளியிடப்பட்டிருக்கிறது. |