பக்கம் எண் :

698
கபிலன்" (புறநா.53) என்றும், மாறோகத்து நப்பசலையார், "புலனழுக்கற்ற வந்த ணாளன், இரந்துசென் மாக்கட்கினியிட னின்றிப், பரந்திசை நிற்கப் பாடினன்" (புறநா.126) என்றும் "பொய்யா நாவிற் கபிலன்" (புறநா.174) என்றும் வியந்து பாடியுள்ளார்கள். இவற்றால் இவருடைய பெரும்புகழும், வாய்மையும், பாடும் திறமையும், கல்வி கேள்வியின் மிகுதியும், அகத்தூய்மையும் விளங்குகின்றன. இவரே, "எஞ்சிக்கூறேன்" (பதிற்.61) எனச் செல்வக்கடுங்கோ வாழியாதனை நோக்கிக் கூறுதல் இவருடைய வாய்மை நலத்தைப் புலப்படுத்தும்.

இவராற் பாடப்பட்டோர்: அகுதை, இருங்கோவேள், ஓரி, சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன், நள்ளி, பாண்டியன், மலையமான் திருமுடிக்காரி, விச்சிக்கோ, வேள்பாரி, வையாவிக்கோப்பெரும்பேகன், மலையன்,

அயிரைமலை, கொல்லிமலை, பறம்புமலை, முள்ளூர்மலை, பறம்புநாடு, கிடங்கில், கொடுமணம், பந்தர், மதுரை, முள்ளூர்க்கானம், வாரணவாசியென்பவை இவராற் பாராட்டப் பெற்றிருத்தலின் அவைகள் இவர் காலத்தில் விளக்கமுற்றிருந்தனவென்றும் அவற்றுட் பல இவர் பழகிய இடங்களென்றும் தெரிகின்றன.

இவருடைய செய்யுட்களில், சிவபெருமான், திருமால், பலதேவர், பிரமன், முருகக்கடவுளென்பவர்களுடைய துதிகள் வந்திருக்கின்றன; அதனால் இவர் சமயக்கோட்பாட்டிற் பாரதம்பாடிய பெருந்தேவனாரைப் போன்றவராக எண்ணப்படுகிறார்.

இவருடைய செய்யுட்கள் மிக்க இனிமையையுடையன; பழைய உரைகளில் மேற்கோளாகக் காட்டப்படும், ‘கபிலரதுபாட்டு' என்னும் தொடர்மொழியே இதனை வலியுறுத்தும்.

குறிஞ்சித்திணையைப் பாடுதலில் இவர் மிக்க ஆற்றலுடையவர். அந்நிலத்தின் இயற்கைச்செவ்வியும், அந்நிலத்தினர் ஒழுகலாறும், அத்திணைக்குரிய ஒழுக்கத்தின் பலவகைத்துறைகளும் இவருடைய செய்யுட்களில் இன்சுவையுடன் இலங்குவதைக் காணலாம். கொடைச் சிறப்பு, நட்பின் நயம், செய்ந்நன்றியறிதல் முதலிய உயர்குணங்களை இவர் பலவகையிற் பாராட்டியிருத்தல் அறிந்து இன்புறற்பாலது.

குறிஞ்சிப்பாட்டிலும் இவருடைய பிறசெய்யுட்களிலும் பலபகுதிகள் ஒப்புமைப்பட அமைந்துள்ளன:

"அன்னாய் வாழிவேண் டன்னை" என இப்பாட்டைத் தொடங்கியதுபோலவே ஐங்குறுநூற்றில் அன்னாய் வாழிப்பத்து முழுவதும் முதலடியில் இத்தொடர்மொழியே அமைக்கப்பட்டிருக்கின்றது. தலைவியினது நோயின் காரணத்தை அறிவதற்காகச் செவிலி கடவுளைப் பேணுதல் முதலியவற்றை இயற்றியதாக இதிற் கூறியதற் கேற்ப, "அன்னையும் பொருளுகுத் தலமரும்" (அகநா. 292) "கறிவளர் சிலம் பிற் கடவுட் பேணி, அறியா வேலன் வெறியெனக் கூறும், அதுமனங் கொள்குவை யனையிவள், புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே