மராஅ யானை மதந்தப வொற்றி, உராஅ வீர்க்கும்" (அகநா. 18) எனவும் விளக்கியுள்ளார். இங்கே கூறப்பட்ட விலங்குகள் முதலியவற்றுட் பல, "கான மானதர் யானையும் வழங்கும், வான மீமிசை யுருமுநனி யுரறும், அரவும் புலியு மஞ்சுதக வுடைய" (அகநா. 318) என்ற விடத்தும் இவராற் கூறப்பட்டுள்ளன. வழியிடத்து உள்ளனவாகக் கூறப்படும் இவ்விலங்கு முதலியன அஞ்சத்தக்கனவென்பதனை, "கடுஞ்சின வேழத் தெதிர்சேற லின்னா, ஒடுங்கி யரவுறையு மில்லின்னா வின்னா, கடும்புலி வாழு மதர்" (இன்னா. 31) எனப் பிறவாற்றாலும் புலப்படுத்தியிருத்தல் காண்க. இவர் இன்னாநாற்பதின் கடவுள் வாழ்த்தில், "முக்கட் பகவன் அடி தொழா தார்க்கின்னா" எனத்தொடங்கினமையும் புலியின் உருவத்தையொப்பப்பூத்த வேங்கையைக் குத்திய யானை அம்மரத்திற்குள் தன் கொம்பு அகப்பட்டுக்கொள்ள அதனைப் பெயர்க்க மாட்டாது வருந்தும் நிலைக்கு இறைவன் வீற்றிருந்தருளும் கைலையை எடுக்கப் புகுந்த இராவணன் அகப்பட்டுக் கொண்டதை உவமை கூறுமுகத்தால், "இமையவில் வாங்கிய வீர்ஞ்சடை யந்தணன், உமையமர்ந் துயர்மலை யிருந்தன னாக" (கலித். 38) எனக்கூறியதும், பாரி புல்லியோரையும் பேணியீவா னென்பதனை உவமை முகத்தாற் புலப்படுத்த நினைந்தவர், "குவியிணர்ப், புல்லிலை யெருக்க மாயினு முடையவை, கடவுள் பேணே மென்னா" (புறநா. 106) என்று சிவபெருமானை நினைத்து குறிப்பாற் கூறினமையும் கபிலர் சிவபெருமான்பால் வைத்த அன்பைப் புலப்படுத்தும். "சக்கரத் தானை மறப்பின்னா" (இன்னா. 1) என்று திருமாலை வணங்கியவர், "மாயோ னன்ன மால்வரைக் கவாஅன்" (நற். 32) என்று அவரை மலையோடு உவமித்துக் கூறியுள்ளார். அவ்வாறு உவமித்தவர் அம்மலையோடு ஒன்றியுள்ள வெள்ளிய அருவிக்கு அம்மாயோனொடு கலந்த உலாவும் பலதேவரை, "வாலியோ னன்ன வயங்குவெள் ளருவி" (நற். 33) என்று உவமித்திருத்தல் இயைபுடையதாக விளங்குகின்றது. பிரமனையும், "பொற்பன வூர்தியை யுள்ளா தொழுகின்னா" (இன்னா. 1) என்று துதித்திருக்கின்றார். இவை இவரது சமநிலையைப் புலப்படுத்தும். குறிஞ்சித்திணையைப் பாடுவதிற் சிறந்த இவர் அந்நிலத்தின் கடவுளாகிய முருகவேளைப்பற்றிய செய்திகளைப் பல விடங்களிற் புலப்படுத்தியுள்ளாரெனல் மிகை. இவர் முருகக்கடவுளை, "இன்னா, சத்தியான் றாடொழா தார்க்கு" (இன்னா. 1) என வணங்கி, சுடர்ப்பூட் சேஎய், நெடுவேள், பிறங்குமலை மீமிசைக் கடவுள், கறிவளர் சிலம்பிற் கடவுள் எனச் சிறப்பித்து, "முருகுறழ் முன்பு " (நற். 225) என அவரது வீரத்தைப் புலப்படுத்தி, "கறங்குவெள் ளருவி பிறங்கு மலைக் கவாஅற், றேங்கம ழிணர வேங்கை சூடித், தொண்டகப் பறைச் சீர்ப் பெண்டிரொடு விரைஇ, மறுகிற் றூங்குஞ் சிறுகுடிப் பாக்கத், தியன் முருகு" (அகநா. 118) எனக் குன்றவாணர் அவருக்கு விழாவெடுக்கும் |