பக்கம் எண் :

703
முறையையும், "மன்ற வேங்கை மலர்சில கொண்டு, மலையுறை கடவுள் குலமுதல் வழுத்தி" (ஐங்குறு, 259) என அவரை வழுத்தும் முறையையும் காட்டி, "குன்றக் குறவன் கடவுட் பேணி, இரந்தனன் பெற்ற வெல்வளைக் குறுமகள்" (ஐங்குறு. 257) என அவரை வழிபடுவதாற் பெறும்பயனைக் குறிப்பித்துச் செல்லும் நீர்மை அறிந்து போற்றற்குரியது. இவர் செய்யுட்களில் வரையரமகளிர், பிறவகை அரமகளிர், மராஅத்த கடவுள் முதலிய தெய்வங்களைப்பற்றிய செய்திகளும் காணப்படும்.

கண்ணபிரான் மல்லரை மறஞ்சாய்த்த செய்தியும், வீமன் துரியோதனனைக் குறங்கறுத்த செய்தியும் இவரால் எடுத்தாளப்பட்டுள்ளன.

அந்தணராகிய இவர், நெய்பெய் தீயின்முன் மணத்தலையும், அந்தணர் அந்திக்காலத்திற் செய்யவேண்டுவனவற்றைச் செய்தலையும், குதிரையின் குடுமிக்கு உவமையாக அந்தணச்சிறுவனது குடுமித்தலையையும், அறநூலறிவு வேள்விமுடித்தல் முதலிய அந்தணர் தகுதிகளையும், "அந்தண ரில்லிருந் தூணின்னர்" (இன்னா. 2) என்பதனால் அவர் ஊண்சுவையைப் பெரிதெனக் கருதாரென்பதனையும், அவர் வீட்டிற் கோழியும் நாயும் புகாவென்பதனையும், வேதம் அவருக்கு இன்றியமையாததென்பதனையும் புலப்படுத்தியிருக்கின்றமை உணர்தற்குரியது.

பெருவள்ளலாகிய பாரியோடிருந்து வாழ்ந்து அவனது வண்மை நலத்தைக் கண்டு மகிழ்ந்த இவர், கொடைத்திறத்தைப் பாடும்முறை மிகச்செவ்விதாக அமைந்துள்ளது: பாரியை, ‘புல்லியோரென்று பாராது யாருக்கும் ஈவான்; விறலியரும் பாணரும் என்னவேண்டினும் வழங்குவான்; அவனுடைய ஊர்களெல்லாம் பரிசிலர் பெற்றாரெனினும் தன்னையே பரிசிலாக உதவுவான்; நிழலில்லாத இடத்திலுள்ள தனிமரத்தைப்போல அவன் யாருக்கும் பயன்படுபவன்' என்றும், மலையமான் திருமுடிக்காரியை, ‘உரிய எல்லாவற்றையும் அந்தணர் பரிசிலர் முதலியோர்க்கு அளித்து விட்டமையால் அவனுக்குரியது அவன் மனைவியின் தோளொன்றே: அவன் இயல்பாகவே கணக்கற்ற தேர்களைப் பலவாகக் கொடுப்பவன்; பரிசிலர் புறப்படுகையில் தீயநிமித்தங்கள் உண்டானாலும் அவன்பாற் சென்றாற் பரிசில் பெறுவது ஒருதலை' என்றும், நள்ளியை, "இரப்போர்க், கிழையணி நெடுந்தேர் களிறொ டென்றும், மழைசுரந் தன்ன வீகை வண்மகிழ்க், கழறொடித் தடக்கைக் கலிமா னள்ளி" (அகநா. 238) என்றும், செல்வக் கடுங்கோ வாழியாதனை, ‘அந்தணருக்கு நீரோடு தானப்பொருள்களைக் கொடுக்கும் பொழுது சொரிந்த தாரை நீர்ப்பெருக்கத்தால் அவனது மாளிகையின் முற்றம் சேறுபட்டது; அவன், ‘நம்மைப் பரிசிலர்கள் காணவேண்டுவதில்லை; நம் மாளிகைப் புறத்து நீயிர் காணினும் கொடுமின்' என்று தன் படை வீரர்களுக்குக் கூறுந்தன்மையன்; பாணர் புரவலன்; பரிசிலர் வெறுக்கை; களிற்றையும் நெல்லையும் வரையறையின்றித் தருபவன்; பாணருக்கு முத்தத்தை