பக்கம் எண் :

705

பொருட்டுப் பறையறைதலும் பிறவுமாகிய செய்திகள் இவர்காட்டிய அக்கால வழக்கங்கள்.

தலைவனுக்கு வண்டு, நண்டின் கண்ணிற்கு நொச்சியரும்பு, மழைக்குப்பஞ்சின் பனுவலும் அவரைப்பூவும், இற்றிமரத்தின் வேருக்கு அருவி, வயலைக் கொடிக்கு நெய்யோடு கலந்த உழுந்துமாவை நூற்ற உருவம், மலைமிசைச் சிறுநெறிக்கு யானைக்கயிற்றுப்புறம், மூங்கிலின் கணுவிலுள்ள பாளைக்கு மான்செவி, வாழைக் குலைக்குப் புலியின் அடி முதலிய உவமைகள் இவருடைய செய்யுட்களிற் காணப்படுகின்றன.

அருவியின் ஒலியாற் குறிஞ்சிநிலத்தாரும் யானையும் தூங்குதலும், குரங்கு மயிலின் முட்டையைப் பாறையில் உருட்டுதலும், அது மலையில் வளர்ந்த இற்றியின் வேரைப் பிடித்துக்கொண்டு மேல் ஏறுதலும், தன் கன்று பால்குடித்துக் கொண்டேயிருப்பப் பிடி தினையையுண்ணுதலும் ஆகியவற்றைப் போன்ற இயற்கைக் காட்சிகளைக் கூறும் பகுதிகள் இவருடைய செய்யுட்களை அழகுபடுத்தி விளங்குகின்றன. அகநானூற்றில், ஆடும் மயிலுக்கு விறலியை உவமை கூறப்புகுந்தவர், காட்டில் வளர்ந்த மூங்கிலிலே உள்ள துளைகளிற் காற்றுப்புகுந்து புறப்படுதலாலுண்டாகும் இன்னொலி குழலோசையாகவும், அருவியின் ஓசை முழவொலியாகவும், மான்களின்குரல் பெருவங்கியத்தின் இசையாகவும், வண்டின் முரற்சியாழொலியாகவும், மந்திகள் அவையிலிருந்து கூத்துக் காண்பாராகவும் மயில் ஆடுகின்றதென்று நயம்பெறப் புனைந்த புலமைத்திறம் ஆய்ந்தறிந்து இன்புறத்தக்கது.

இவர் பாக்களிற் சில சில இடங்களில் நகைச்சுவை ததும்பும் பகுதிகளும் அமைந்துள்ளன: ஆண்குரங்கு மரத்திற் பாய்கையில் விழுந்து விட அந்தத் தப்பு அம்மரத்தின் கொம்பினதாகக் கூறப்பட்டதை ஓரிடத்தில் உவமை கூறுவதும், அவரையை நிறையத்தின்ற மந்தி பலபண்டங்களை விற்பார்களது பையைப்போலத் தோன்றுமென்பதும், குரங்கு பிரம்பின் கோலைக்கொண்டு மழைக்கொப்புளத்தைப் புடைத்தல், நறைக்கொடிகொண்டு மேகங்களைப் புடைக்க முயலுதல் என்பவற்றைச் சொல்லுவதுமாகிய பகுதிகளில் அவற்றின் இயல்பை நகைச்சுவைபட விளக்குதல் காண்க. இன்னும், பரணிலுள்ள வேடனது நெருப்புக்குப் பயந்து சென்ற யானை வானமீன்களின் ஒளியைக் கண்டவிடத்தும் அஞ்சியதென்றும், துறுகல்லை யானை பிடியென எண்ணி மயங்கித் தழுவிய தென்றும், புலியைத் தாக்கிய வருத்தத்தோடு தூங்கிய யானை நனவிற் செய்தசெயல் மனத்தில் அழுந்தியிருந்தமையின் கனவிலும் அவ்வாறு கண்டு உடனே வெருவியெழுந்து புதிதாக மலர்ந்த வேங்கை மரமொன்றைத் தன்னாற் கடியப்பட்ட புலியென்று மயங்கிக் குத்திச் சிதைத்துச் சினந்தணிந்தபின் அது மரமென்றும் புலியன்றென்றும் உணர்ந்து நாணிற்றென்றும், தினைப்புனத்திற் பெண்புலி போன்றமைத்த உருவத்தினைக் கண்டு மயங்கி ஆண்புலி தழுவிச்சென்றது என்றும் புனைந்த காட்சிகளும், கலித்தொகையிற் கூறியுள்ள முதுபார்ப்