பானது பெருங்கூத்தும், "கள்ளில்லா மூதூர் களிகட்கு நன்கின்னா" ‘கடித்தமைந்த பாக்கினுட் கற்படுதலின்னா" என நீதிகளைக் கூறும் இன்னா நாற்பதிற் காணப்படுதலும் இவர் நகைச்சுவையைப் பல்லாற்றானும் புலப்படுத்தும் இயல்புடையவரென்பதைத் தெரிவிக்கும். இவரது புலமை நலங்கள் இன்னும் எடுத்தெழுதப்புகின் மிகவிரியு மாதலின் அஞ்சி இதனோடு நிறுத்தப்பெற்றன. 5. காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்: இவர், முல்லைப்பாட்டை இயற்றிய ஆசிரியர்; இவருடைய இயற்பெயர் பூதனாரென்பது, ‘ந' சிறப்பைப் புலப்படுத்துவது. நற்றிணை, 29-ஆம் செய்யுளை இயற்றிய பூதனார் இவரேபோலும். இவருடைய ஊர் காவிரிப்பூம்பட்டினமென்றும் இவருடைய தந்தையார் பெயர் பொன்வாணிகனாரென்றும் வணிககுலத்தினரென்றும் பெயருக்கு முன்னுள்ள அடைமொழியால் தெரியவருகின்றது. எட்டுத்தொகை முதலியவற்றில் இவரியற்றியதாக ஒன்றும் காணப்படவில்லை. காவிரிப்பூம்பட்டினத்திற் சதுக்கத்துப்பூதம் முதலிய பூதங்கள் மிக்க சிறப்புடையனவாகவும் பலரால் வழிபடத்தக்கனவாகவும் இருந்து வந்தமையின் அவற்றுள் ஒன்றை நினைந்து பூதனென்னும் பெயர் இவருக்கு இடப்பட்டதுபோலும். பாசறையைப்பற்றி விரிவாக முல்லைப்பாட்டிற் கூறியிருத்தலால் இவர் நல்லவீரம் பொருந்திய அரசர்களோடு பழகியவரென்று தோற்றுகின்றது. 6. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்: இவரது இயற்பெயர் கீரனாரென்பது; ‘ந' சிறப்புப் பொருளைத்தருவதோரிடைச்சொல். திருமுருகாற்றுப்படையும் நெடுநல்வாடையும் இவர் இயற்றியவை. இவற்றையன்றி நற்றிணையில் ஏழுசெய்யுட்களும், குறுந்தொகையில் எட்டும், அகநானூற்றில் பதினேழும், திருவள்ளுவமாலையில் ஒன்றும், பதினோராந் திருமுறையில் திருமுருகாற்றுப்படையை யன்றி ஒன்பது பிரபந்தங்களும் இவர் இயற்றியனவாகக் காணப்படுகின்றன; வேறு சில தனிப்பாடல்களும் இவர் பெயரால் வழங்கும். இவர் இயற்றிய நாலடி நாற்பதென்னும் நூலொன்றுண்டென்றும் அஃது அவிநயர்யாப்புக்கு அங்கமாக உள்ள யாப்பிலக்கணநூலென்றும் யாப்பருங்கலவிருத்தி முதலியவற்றால் தெரிகின்றது. இவர் பெயர் நக்கீரர், நக்கீரனார், நக்கீர தேவ நாயனார், மதுரை நக்கீரரெனவும் காணப்படுகின்றது. இவர் பெயருக்கு முன்னுள்ள அடைமொழியால் இவரது ஊர் மதுரையென்றும் இவருடைய தந்தையார் ஒரு கணக்காயர் (உபாத்தியாயர்) என்றும் தெரிகின்றது. மதுரைக் கணக்காயனாரென்று பெயருள்ள ஒரு நல்லிசைப் புலவர்தாம் இவர் தந்தையாரெனத் தோற்றுகின்றது. இவருடைய புதல்வர் கொற்றனாரென்பவர்; கீரங்கொற்றனாரெனவும் வழங்கப்பெறுவர். இறையனாரகப் பொருளுக்கு முதலில் நல்லுரைகண்டு அதனைத் தம் புதல்வராகிய கொற்றனாருக்குக் கூறினாரென்று இறைய |