பக்கம் எண் :

707
னாரகப் பொருளுரை கூறும். இவர் அந்தணவருணத்தினரென்று கூறப்படுவார்; வடமொழியிலும் நல்ல பயிற்சியையுடையவர், "கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டு கீரர்" (திருப்புகழ்) என்றதனால் அருணகிரிநாதரும் இவரை அந்தணராகவே கருதினாரென்பது பெறப்படுகின்றது. திருக்காளத்தி ஞானப் பூங்போதையம்மைமீது இவர் இயற்றிய வடமொழித் தோத்திர மொன்றும் வடமொழி நிகண்டொன்றும் தஞ்சை அரண்மனைப் புத்தக சாலையிலுள்ளதென்று கூறுவர்.

இவர், மதுரைப் பட்டிமண்டபம் புகுந்து வடமொழியே சிறப்புடையதென்றும் தென்மொழி இழிந்ததென்றும் கூறிய குயக்கொண்டானென்பவனை இறக்கப்பாடி, பின்பு சிலர் வேண்ட அவனைப் பிழைக்கவும் பாடினார். சிவபெருமான், தருமியென்னும் ஓர் அந்தணன் பொருட்டுப் பாடிக்கொடுத்த, "கொங்குதேர் வாழ்க்கை" என்னும் செய்யுள் சம்பந்தமாக இவருக்கும் அக்கடவுளுக்கும் வாதம் நிகழ்ந்ததென்றும் அவ்வாதத்தில் இவர் வரம்பிகந்து பேசினமையின் அக்கடவுளுடைய சினத்திற்கு ஆளாகி நோயுற்றாரென்றும், பின்பு இவர் அவரைப் பணிந்திரப்பக் கைலைகண்டால் நோய்தீருமென்று அவர் கட்டளையிட்டருள இவர் கைலையை நோக்கிச் சென்றாரென்றும், செல்லும் வழியில் திருப்பரங்குன்றத்தில் ஒரு பூதத்தாற் குகையொன்றில் அடைக்கப்பட்டுத் திருமுருகாற்றுப்படை பாடி முருகக்கடவுளால் மீட்கப்பட்டா ரென்றும், பின்பு திருக்காளத்தி சென்று பொன்முகரியாற்றில் நீராடுகையிற் கைலைத்தரிசனம் பெற்று நோய்நீங்கிக் கைலைபாதி காளத்திபாதியந்தாதி யென்னும் நூலைப் பாடினாரென்றும் உள்ள சில செய்திகள் இவருடைய வரலாறாகத் திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் முதலியவற்றிற் காணப்படுகின்றன. சிவபெருமான் சினங்கொண்டபொழுது அதனைத் தணிக்கக் கோபப்பிரசாதம் என்னும் பிரபந்தம் இவராற் பாடப்பட்டதென்பர்.

மதுரை மேலைமாசி வீதியின் மேல்சிறகில் நக்கீரர் கோயிலென்று ஒரு கோயில் பெரிதாக வுள்ளது; அது சங்கத்தார் கோயிலெனவும் வழங்கும்; அதில் இவருடைய திருவுருவமுள்ளது. பின்னும், இவருடைய திருவுருவம் திருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ முத்துக்குமாரசாமியின் பக்கத்தே அமைக்கப் பெற்றுள்ளது; திருவிழாக் காலத்தில் புறப்பாடுண்டு. இவர் ஈங்கோய்மலையெழுபது என்னும் நூல் இயற்றியது பற்றி முன் காலத்தில் இருந்த அரசரொருவர் திருவீங்கோய்மலைக் கோயிலில் இவருடைய திருவுருவத்தைப் பிரதிட்டிப்பித்துப் பூச முதலியன நடைபெற்று வரும்படி நிபந்தம் அமைத்திருந்தாரென்று அத்தலத்துச் சிலாசாஸன மொன்றால் தெரியவருகின்றது. நக்கீரராற் பிரதிட்டிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சிவலிங்கப் பெருமான் திருவுருவம் திருக்காளத்தியில் உண்டு; அதற்கு நக்கீர நாதர் அல்லது நக்கீரலிங்க மென்பது திருநாமம்.

இவர் செய்யுட்களில் வந்த தெய்வங்கள்: இந்திரன், இல்லுறை