யோர்" என்று கூறுவதால் இவர் சிவபெருமான்பாற் சிறந்த அன்புடையா ரென்பது அறியப்படும்; "தென்னவர் பெயரிய துன்னருந் துப்பிற், றொன்முது கடவுள்" என்பதன் உரையில், `கூற்றுவனை யுதைத்த கடவுளென்று இறைவனாக்கி ' என்று மறுக்கும் வாயிலால் நச்சினார்க்கினியர் வெளியிடும் பொருள் இக்கருத்துக்குத் துணையாக அமைகின்றது. வாட்டாற்று எழினியாதனென்பானை இவர் பாடியுள்ளர். இவர் பாடியனவாக இப்பொழுது கிடைக்கும் செய்யுட்கள் 14: மதுரைக். 1, நற். 2, குறுந். 3, அகநா. 1, புறநா. 6, திருவள்ளுவ. 1, இவற்றுள். நற்றிணை, 123-ஆம் செய்யுள் காஞ்சிப் புலவனென்னும் பெயரோடும், குறுந்தொகை, 173-ஆம் செய்யுளும், அகநானூறு, 89-ஆம் செய்யுளும் மதுரைக்காஞ்சிப்புலவனென்னும் பெயரோடும் வழங்குகின்றமையின் அவை மதுரைக்காஞ்சிக்குப் பின்னர் இவரால் இயற்றப்பெற்றன வென்று தோற்றுகின்றது. இவர் செய்யுட்களில் மதுரைக் காஞ்சியை யொழிந்த ஏனையவற்றில் வேள் எவ்வியினது மிழலைக் கூற்றமும் வேளிரது முத்தூற்றுக் கூற்றமும் குன்றூரும் கூறப்படுகின்றன. காஞ்சித்திணையில் இவராலியற்றப் பெற்றவற்றுள் மதுரைக் காஞ்சியோடு சொற்பொருளொப்புமை யுடையதும் பொருண்மொழிக் காஞ்சித் துறையமைந்ததுமாகிய ஒரு செய்யுள் புறநானூற்றில் உண்டு. மதுரைக்காஞ்சி பெரும்பாலும் வஞ்சியடிகளாக இருத்தல்போலவே புறநானூற்றிலுள்ள, 24, 26, 396-ஆம் செய்யுட்களும் இருக்கின்றன. போர்க்களத்தில் தலைகளை அடுப்பாகவும் குருதியை உலையாகவும் தோளைத் துடுப்பாகவும் கொண்டு பேய்கள் அடுதல் இப்பாட்டிற் கூறப்பட்டிருத்தல், "முடித்தலை யடுப்பாகப், புனற்குருதி யுலைக்கொளீஇத், தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சி", "பொருந்தாத் தெவ்வ ரிருந்தலை யடுப்பிற்.... மாமறி பிண்டம் வாலுவ னேந்த" (புறநா.26. 372) எனக் கூறியவற்றின் விரியாக அமைந்துள்ளது. "அரசுபட வமருழக்கி, முரசுகொண்டு களம்வேட்ட, வடுதிறலுயர் புகழ்வேந்தே" (மதுரைக்.128. 30) என்ற அடிகளிலும், "அரைசுபட வமருழக்கி, உரைசெல முரசுவௌவி.....அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய" (புறநா, 26, என்பதிலும் சொற்பொருளொப்புமை மிக்கு விளங்குதல் காண்க. அடுகளம் வேட்டதை இங்கே பிற செய்திகளோடு கலந்து கூறியவர் தனியாக அதனைச் சிறப்பித்து மறக்களவேள்வித்துறைச் செய்யுளொன்று (புறநா. 372) பாடியுள்ளது அறிதற்குரியது. நெடுஞ்செழியனை வாழ்த்துவார் வளர்பிறைபோல அவனது கொற்றம் சிறக்கவென்றும் தேய்பிறைபோல அவன் தெவ்வராக்கம் கெடுகவென்றும் இங்கே உரைத்தவர், "நின்று நிலைஇயர்நின் னாண்மீ னில்லாது, படாஅச் செலீயர்நின் பகைவர் மீனே" (புறநா. 24) என வாழ்த்துதல் இவருடைய கருத்தொப்புமையை உணர்த்துகின்றது. வாழ்க்கைநிலையாமையைப் புலப்படுத்த நினைந்த இவர், நற்செயலைச் செய்யாமல் வீணே வாழ்நாள் போக்கி மாண்டவர் பல |