ரென்பதனை இங்கே கூறினார்; இவ்வாறே புறநானூற்றில், "மலர்தலை யுலகத்துத் தோன்றிப், பலர்செலச் செல்லாது நின்றுவிளிந் தோரே" (124) என்றனர். இங்கே கூறிய, "விளைந்த கழனி, வன்கை வினைஞரரிப்பறை" என்பதனை, "விளைகழனி யரிப்பறை" (புறநா. 396) எனச் சுருக்கிச் சொல்லியிருப்பதும், "மறவர், வாள்வலம் புணர்ந்தநின் றாள் வலம் வாழ்த்த" என்றவர், "வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த" (புறநா.24) என்பதும் இப்பாட்டின் இறுதியில், "இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய, மணங்கமழ் தேறன் மடுப்ப நாளும், மகிழ்ந்தினி துறைமதி பெரும" என வாழ்த்தியவர், "ஒண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய, தண்கமழ் தேறன் மடுப்ப மகிழ்சிறந், தாங்கினி தொழுகுமதி பெரும" (புறநா.24) என்பதும், கணைக்குமழை, களிற்றுக்கு நாவாய், பலர் நடுவிலுள்ள அரசனுக்கு நாண்மீனுக்கிடையிலுள்ள சந்திரன் என்று இங்கே கூறப்பட்ட உவமைகளையும், கோசரையும் பிறவிடங்களிலும் சொல்லியிருத்தலும் இவர் தாம் நினைந்த கருத்துக்களையும் சொற்றொடர்களையும் பல இடங்களிலமைத்து உறுதிப் படுத்திப்பாடும் இயல்புடையவரென்பதனைப் புலப்படுத்துகின்றன. இவர் பாடிய அகத்திணைச் செய்யுட்களில், இல்லறம் நடத்தும் மகளொருத்தி விருந்தினரை உண்பிக்கும்பொருட்டு உணவு சமைக்கும் இயல்பும், மடன்மாவின் இலக்கணங்களும், வேடர்கள் தாம் கொள்ளையிட்டுப்பெற்ற பொருள்களைப் பாறையின்மேல் வைத்துப் பங்கிட்டுக் கொள்ளும் செயலும் நயம்படக் கூறப்பெற்றுள்ளன. 8. முடத்தாமக் கண்ணியார்: பொருநராற்றுப் படையை இயற்றியவர் இவர். "இயற்பெயர் முன்னர்" (தொல், சொல். இடை. சூ. 22. சே. ந.) என்னும் சூத்திர உரையில் ஆர்விகுதி பன்மையொடு முடிதற்கு முடத்தாமக்கண்ணியார் வந்தாரென்பது உதாரணமாகக் காட்டப்பெற்றிருத்தலால் இவர் பெயர் முடத்தாமக் கண்ணியென்று தெரிகின்றது. இப்பெயர் உறுப்பால் வந்ததென்றும் இவர் பெண்பாலாரென்றும் கூறுவாரும் உளர். ஆர்விகுதிபெற்ற பல பெயர்கள் இருப்ப இவர்பெயரை உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டியது இவரது சிறப்பைப் புலப்படுத்தும். |