பக்கம் எண் :

712

பாடப்பட்டோர் வரலாறு

1. ஆரியவரசன் பிரகத்தன்: இவன் பத்துப்பாட்டினுள் எட்டாவதாகிய குறிஞ்சிப்பாட்டைக் கேட்டுத் தமிழ்ச்சுவையை யறிந்து இன்புற்றவன்; கபிலர் காலத்தவன். இவனைப்பற்றி இப்பொழுது வேறு யாதொன்றும் விளங்கவில்லை. குறுந்தொகையில். "அறிகரி பொய்த்த லான்றோர்க் கில்லை" (181) என்னுஞ் செய்யுளை இயற்றியவன் பெயர் ஆரியவரசன் யாழ்ப்பிரமதத்தனென்று தெரிகின்றது. சிலப்பதிகாரத்தில் ஆரியமன்னரென்னும் ஒருவகையரசர் கூறப்படுகின்றனர்; இவன் அவருள் ஒருவனோ வேறோ தெரியவில்லை.

2. ஓய்மானாட்டு நல்லியக்கோடான்: இவன் பத்துப்பாட்டினுள் மூன்றாவதாகிய சிறுபாணாற்றுப்படைத்தலைவன்; இவன் காலத்தில் இவனைப்போன்ற பெருங்கொடையாளிகள் யாரும் இலர்; பேகன் முதலிய ஏழு வள்ளல்களுக்கும் இவன் காலத்தாற் பிந்தியவன்; இவை முறையே இப்பாட்டிலுள்ள, "வஞ்சியும் வறிதே", "மதுரையும் வறிதே", "உறந்தையும் வறிதே" என்பவற்றாலும் 84-ஆம் அடி முதலியவற்றாலும் விளங்கும். புறநானூற்றில் "ஓரையாயம்" என்னும் 176-ஆம் செய்யுளைப் பெற்றவன்; இவன் ஒய்மானல்லியக்கோடனெனவும் வழங்கப் பெறுவன்; இதனை மேற்கூறிய புறப்பாட்டின் பின்னுள்ள வாக்கியத்தாலறிக. இவன் பரம்பரையில் ஓய்மானல்லியாதன் ஓய்மான் வில்லியாதனென்ற இரண்டு உபகாரிகள் இருந்து விளங்கினார்களென்று புறநானூற்றால் தெரிகின்றது. இவன் காலத்து நல்லிசைப் புலவர்கள் நல்லூர்நத்தத்தனாரும், மேற்கூறிய, "ஓரையாயம்" என்னும் பாடலையியற்றிய புறத்திணைநன்னாகனா ரென்பவரும் ஆவர். இவனுடையதாகச் சொல்லப்பட்ட கிடங்கிலென்னும் ஊர் இப்பொழுது திண்டிவனத்தைச் சார்ந்துள்ளது; கிடங்காலெனவும் வழங்கும். திண்டிவனத்திலுள்ள திண்டீசுவரமென்னும் சிவபெருமான் திருக்கோயில் இக்கிடங்கிலிலிருந்ததாகச் சாஸனங்களால் தெரிய வருதலின் இப்பொழுது திண்டிவனமென்று வழங்கும் பெரிய ஊரும் அதனைச் சார்ந்த இடங்களும் சேர்ந்த பெரியதொரு நகரமாகக் கிடங்கில் இருந்திருக்க வேண்டுமென்று தோற்றுகின்றது. இவ்வூர், காவிதிக்கீரங் கண்ணனார், காவிதிப் பெருங்கொற்றனார், குலபதி நக்கண்ணனாரென்னும் மூன்று நல்லிசைப் புலவர்களுக்குரிய இடமாகத் தெரிகின்றது. யாப்பருங்கல விருத்தியின் மேற்கோளாகிய, "கிடங்கிற் கிடங்கில்" என்னும் வெண்பாவில் வந்துள்ள கிடங்கிலென்னுமூர் இதுவே. இதிற் சிதைந்த அகழியும் இடிந்த கோட்டையும் இன்றும் காணப்படுகின்றன. இவனுடைய ஊர்களுள் ஒன்றாகிய மாவிலங்கை யென்பது, புனனாட்டுக்கு வடக்குள்ள அருவாநாடு, அருவாவடதலை நாடென்ற இரண்டும் சேர்ந்த இடமென்று கூறுவர்; அவ்வூர் புறநானூற்றாலும் இவனதென்று தெரிகின்றது. இவனுடைய மற்ற ஊர்களுள் எயிற்பட்டினம், வேலூர், ஆமூரென்பவை