பக்கம் எண் :

713
தொண்டை நாட்டிலுள்ள இருபத்து நான்கு கோட்டங்களுள் மூன்று கோட்டங்களுக்குத் தலைநகரங்களாகவுள்ளவை; வேலூர் உப்புவேலூரென்று இக்காலத்து வழங்குகின்ற தென்பர். சிறுபாணாற்றுப்படை, 172 - 3- ஆம் அடிகளுக்கு நச்சினார்க்கினியர் எழுதிய விசேடவுரையால் இவன் தன்பகை மிகுதிக்கு அஞ்சி முருகக்கடவுளை வழிபட்டானெனவும் அப்பொழுது அக்கடவுள் கனவில் எழுந்தருளி இவ்வூரிலுள்ள ஒரு கேணியிற் பூத்தபூவைப் பறித்துப் பகைவர்பால் விடுக்குமாறு கட்டளையிட்டருளினாரெனவும் அவ்வாறே இவன் அப்பூவைப் பறித்து அதனையே வேலாகக்கொண்டு பகைவரை வென்றானெனவும் இக்காரணத்தால் இது வேலூரெனப் பெயர்பெற்றதெனவும் அறியப்படுகின்றது. "உறுபுலித்துப்பி னோவியர் பெருமகன்" (சிறுபாண். 122) என்றதனால், இவன் ஓவியர் குடியிற் பிறந்தவனென்று எண்ணப்படுகின்றான். ஓவியர்குடிநாகர் வகுப்பினுள் ஒரு பிரிவென்பர்.

3. குமரவேள்: இவருடைய பெருமைகள் பலநூல்களாலும் விளங்கத்தெரிந்தவையே. திருமுருகாற்றுப்படையிற் கூறப்பெற்ற இவருடைய படைவீடுகள், திருப்புகழ் முதலியவற்றிலும், அவற்றுள் திருப்பரங்குன்றம், மதுரைக்காஞ்சியிலும், பரிபாடலிலும்; "ஒன்னாதார்க் கடந்தடூஉ முரவுநீர் மாகொன்ற, வென்வேலான் குன்றின்மேல் விளையாட்டும் விரும்பார்கொல்" எனக் (27) கலித்தொகையிலும், "சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேற், சீர்மிகு முருகன் றண்பரங்குன்றத், தந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை, யின்றீம் பைஞ்சுனை", "கூடற் குடாது, பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யுயரிய, வொடியா விழவி னெடியயோன் குன்றத்து, வண்டுபட நீடிய குண்டுகுனை" என (59, 149) அகநானூற்றிலும், திருச்சீரலைவாய் (செந்தில்) "திருமணி விளக்கி னலைவாய்ச், செருமிகு சேஎயொ டுற்ற சூளே" (அகநா, 266), "வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தி, னெடுவே ணிலைஇய காமர் வியன்றுறை" (புறநா. 55), "சீர்கெழு செந்திலுஞ் செங்கோடும் வெண்குன்று, மேரகமு, நீங்கா விறைவன்" (சிலப். குன்றக். 8), "நஞ்செந்தின்மேய, வள்ளி மணாளர்க்குத் தாதை கண்டாய்" (தே. மறைக்காடு) எனப் புறநானூறு முதலியவற்றிலும் பாராட்டப்பெற்றிருத்தல் காண்க. இங்கே காட்டிய சிலப்பதிகாரச் செய்யுளில் ஏரகமும் கூறப்பெற்றுள்ளது. பழமுதிர் சோலையில் முருகக்கடவுளின் தலம் இருந்ததென்பதை "புண்ணிய சரவணம்" (சிலப். 11: 94) என்னும் பொய்கையின் பெயரும், அஃது அப்பெயருடன் இக்காலத்தும் அங்கேயிருத்தலும் புலப்படுத்தும்.

திருப்பரங்குன்றம் முதலிய ஆறுபடை வீடுகளும் திருமுருகாற்றுப் படையிற் கூறிய முறைப்படியே கந்தரந்தாதியின் முதற் செய்யுளிலும் கந்தபுராணக் கடவுள் வாழ்த்திலும் பிறவற்றிலும் அமைந்துள்ளன. அலைவாயை நாமனூரலைவாயென்றும், திருவேரகத்தை மலை நாட்டிலுள்ள