தொரு திருப்பதியென்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்; திருவேரகம் சுவாமிமலையென்பது அருணகிரியார் முதலியோர் கொள்கை. திருவாவினன்குடி, சித்தன்வாழ்வென்றும் வழங்கப்படுமென்று தெரிகிறது. 4. சோழன் கரிகாற்பெருவளத்தான்: இவன், இப்பாட்டுக்களுள், பொருநராற்றுப்படைக்கும் பட்டினப்பாலைக்கும் தலைவன்; சோழன் உருவப்பஃறேரிளஞ்சேட்சென்னியின் புதல்வன்; நாங்கூர் வேளிடை மகட்கொண்டோன்; இவற்றைப் பொருநராற்றுப்படை, 130-ஆம் அடியாலும், தொல்காப்பியத்திலுள்ள அகத்திணையியல், 30-ஆம் சூத்திரம் நச்சினார்க்கினியருரையாலுமுணர்க. தம்முள் மாறுபட்டு வந்து தன்னை இளையனென்றிகழ்ந்த முதியோர் பொருட்டுத் தான் முதியன் போல் வந்து அவர்கள் வழக்கைத் தீர்த்தானென்றும், தான் கருவூரிலிருக்கையில் கழுமலமென்னுமூரிலிருந்தயானையாற் கொண்டுவரப்பட்டு அரசாட்சிக்கு உரியனாயினானென்றும், இளமையில் நெருப்பாற் சுடப்பட்டு உயிர்பிழைத்தானென்றும், இரும்பிடர்த் தலையாரை, அம்மானாக உடையனென்றும் பழமொழி 21, 62, 105-ஆம் வெண்பாக்களாலும் அவற்றின் உரைகளாலும் மணிமேகலையாலும் விளங்குகின்றன. பட்டினப்பாலையைக் கேட்டுக் கடியலூருருத்திரங்கண்ணனாருக்கு இவன் பதினாறுநூறாயிரம் பொன் பரிசளித்தானென்று கலிங்கத்துப்பரணி, இராசபாரம்பரியம் 21-ஆம் செய்யுளால் விளங்குகின்றது. வெண்ணியென்னுமூர்ப்புறத்தேயுள்ள போர்க்களத்திற் சேரமான் பெருஞ்சேரலாதனோடு போர்செய்து அவனை வென்றான்; அவனோடு அக்களத்தில் ஒரு பாண்டியனையும் இவன் வென்றானென்று பொருநராற்றுப்படையால் விளங்குகின்றது. இவன் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து அரசாட்சி செய்தானென்பதும், ஒருகாலத்தில் இமையமலை வரைற் சென்று இடையிலுள்ள அரசர்களை வென்றானென்பதும் சிலப்பதிகாரம், அதனுரை, கலிங்கத்துப்பரணி, பெரியபுராணம், காஞ்சிப்புராணம், முதலியவற்றால் தெரிகின்றன. இவன் உறையூரைத்தனது இராசதானியாகத் தேர்ந்தெடுத்து அதனை வளம்படுத்தினான். இவன் வீரருட்சிறந்தவீரன். இவன்பெயர் சோழன் கரிகால் வளவனெனவும் கரிகாலனெனவும், கரிகாலெனவும் வழங்கும். இவனைப் பாடியவர்கள் கருங்குழலாதனார், வெண்ணிக்குயத்தியார்; இவருள் இவன் இறந்த பின்பும் இருந்தோர் கருங்குழலாதனார். 5. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்: இவன், மதுரைக்காஞ்சியும் நெடுநல்வாடையும் பெற்றோன்; இளமைப்பருவத்தில் 1தலையாலங்கானத்திற் கோச்சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறையோடு போர்செய்து அவனைச்
1.தலையாலங்கானம் - தலையாலங்காடு; சோழநாட்டுச் சிவஸ்தலங்களுள் ஒன்று, |