சிறைப்படுத்தியதன்றிச் சோழன் திதியன் எழினி எருமையூரன் இருங்கோவேண்மான் பொருநன் என்பவரையும் வென்றான்; வேள் எவ்வியின் மிழலைக்கூற்றாத்தையும் பழைய வேளிருடைய முத்தூற்றுக்கூற்றத்தையும் கைக்கொண்டான்' மறக்கள வேள்வியும் அறக்களவேள்வியும் செய்தான்; "நகுதக்கனரே" (புறநா.72) என்னும் செய்யுளை இயற்றியவனாதலால், இவன் நல்லிசைப் புலவர் வரிசையில் விளங்கியவனென்றும் தெரிகின்றது; புலவர்களிடத்து மிக்க அன்புள்ளவன்; மாங்குடி மருதனார் முதலிய நல்லிசைப் புலவர்கள் பலரை ஆதரித்தோன், உத்தம குணங்கள் பலமுடையோன். இவன் பெருமைகள் விரிப்பிற் பெருகும். இவன் பெயர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனெனவும், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனெனவும், நெடுஞ்செழிய னெனவும் வழங்கும். இவனைப் பாடிய புலவர்கள்: குடபுலவியனார், கல்லாடனார், மாங்குடிகிழார், இடைக்குன்றூர்கிழார். 6. தொண்டைமானிளந்திரையன்: இவன் நான்காம் பாட்டாகிய பெரும்பாணாற்றுப் படைக்குத் தலைவன்; இவனுடைய பிறப்பின் வரலாறு இப்புத்தகம் 214-ஆம் பக்கத்தால் அறியலாகும்; அதில் நாககன்னியென்றது மணிமேகலை 24-ஆம் காதையின் 57-ஆம் அடியிற் கூறப்பெற்ற பீலிவளையேயென்றும் அதற்குத்தக்க ஆதாரம் சாஸனத்திலும் நூல்களிலுமுள்ளதென்றும் சொல்லுகின்றனர்; முடியுடை மன்னர் மூவரொடு சேர்த்து எண்ணப்படும் பெருமைவாய்ந்தவனேனும், "வில்லும் வேலும்" என்னும் (தொல்.மரபு.சூ.83) சூத்திரவுரையில், 'மன்பெறு மரபி னேனோ ரெனப்படுவார், அரசுபெறுமரபிற் குறுநில மன்னரெனக் கொள்க; அவை பெரும்பாணாற்றுள்ளும் பிறவற்றுள்ளுங் காணப்படும்' எனப் பேராசிரியர் எழுதியிருத்தலால் இவனைக்குறுநில மன்னனாகப் பண்டையோர் கொண்டிருந்தனரென்று தெரிகின்றது. இப்பெயர் இளந்திரையனெனவும் திரையனெனவும் திரையலெனவும் நூல்களில் வழங்கும். இவனியற்றிய பாடல்களாக நற்றிணையில் மூன்றும் புறநானூற்றில் ஒன்றும் காணப்படுதலால், இவன் நல்லிசைப்புலவர் வரிசையிற்சேர்ந்த பெருமைவாய்ந்தவனென்றும் தெரிகின்றது. இளந்திரையமென ஒரு நூல் இவனாற் செய்விக்கப்பெற்றதென்று இறையனாரகப்பொருளுரை, நன்னூல் மயிலைநாதருரை முதலியன தெரிவிக்கின்றன; நன்னூல் மயிலை நாதருரையில், (ப. 245) திரையனூரென்பதற்குத் திரையனாற் செய்யப்பட்ட ஊர், திரையனது ஊர் என்று பொருள் செய்திருத்தலின், இப்பெயருள்ள ஊரொன்று பண்டைக்காலத்தில் இவனால் நிருமிக்கப்பெற்றதென்று தெரிகிறது. "வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையார் இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட் டோங்குவெள் ளருவி வேங்கடத் தும்பர் (அகநானூறு, 213) |