பக்கம் எண் :

716

"பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ
பாவீற் றிருந்த புலவீர்காள் பாடுகோ
ஞாயிற் றொளியான் மதிநிழற்றே தொண்டையார்
கோவீற் றிருந்த குடை

"வஞ்சி வெளிய குருகெல்லாம் பஞ்சவன்
நான்மாடக் கூடலிற் கல்வலிது
சோழ னுறந்தைக் கரும்பினிது(?) தொண்டைமான்
கச்சியுட் காக்கை கரிது

"ஆழி யிழைப்பப் பகல்போ மிரவெல்லாம்
தோழி துணையாத் துயர்தீரும் - வாழி
நறுமாலை தாராய் திரையவோஒ வென்னும்
செறுமாலை சென்றடைந்த போது

(பழைய மேற்கோள்கள்)

என்பவற்றால் இவன் பரம்பரையோருடைய பெருமை புலப்படும்.

7. நன்னன்: பத்தாவதாகிய மலைபடுகடாத்தின் தலைவனாகிய இவன் வரலாற்றை அறிவதற்கு அந்நூலும் அதன் இறுதியிலுள்ள பழைய வாக்கியமும், அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, புறநானூறு, மதுரைக்காஞ்சி முதலியவற்றின் சில பகுதிகளுமேயன்றி வேறுகருவி கிடைத்திலது. இவன் வேளிர் குலத்தைச் சேர்ந்தவன்; பிற நூல்களில் நன்னன் வேண்மானெனக் கூறப்பெறுபவன் இவனே (அகநா, 97); வேண்மான்-வேளிர் தலைவன். இவன் தந்தையின் பெயரும் நன்னனென்பது.

இவனுடைய ஆட்சிக்குட்பட்ட பெரும் பிரிவான இடம் பல்குன்றக் கோட்டம்; நகர் செங்கண்மா (மலைபடுகடாத்தின் இறுதிவாக்கியத்தைப் பார்க்க); மலை நவிரமலை; ஆறு சேயாறு; இவற்றுள்,

பல்குன்றக்கோட்டமென்பது தொண்டைநாட்டின் பெரும்பிரிவாகிய 24-கோட்டங்களுள் ஒன்று. பல குன்றங்களைத் தன்பாற் பெற்றிருத்தலின் இக்கோட்டம் இப்பெயர் பெற்றது. கோட்டமென்பது நாட்டின் பெரும்பிரிவிற்குச் சங்கேதமாக வழங்கி வருகின்றது. `பல்குன்றக் கோட்டத்துச் சிலைநாட்டுத் திருவேங்கடம்' என்னும் சிலாசாஸன வாக்கியத்தால், திருவேங்கடமலை (திருப்பதி) யும் பல்குன்றக் கோட்டத்துள்ளதென்று தெரிகிறது; "குன்றுசூ ழிருக்கை நாடுகிழ வோனே" (மலைபடு.583) என்பது இதனை வலியுறுத்தும்.

செங்கண்மா என்னும் ஊர் திருவண்ணாமலைக்கு மேற்றிசையில் உள்ளது; இது செங்கண்மானெனவும், செங்கமா எனவும் இக்காலத்து வழங்கும். இந்நகரில், பண்டைக் காலத்தில் அகழி, கோட்டை, பெரியவீதி, கடைத்தெரு, குறுந்தெரு, சிங்காதனமமைந்த இராசசபை, நாளோலக்கம், அரியகாவல்களையும் நன்னனைப் பார்த்தற்குப் பலரும்