பக்கம் எண் :

717
தத்தமக்குரிய காணிக்கைகளைக் கொணர்ந்து வைத்துக் காத்திருக்கும் முன்றிலையுமுடைய கோபுரவாசல் முதலியவற்றையுடைய அரண்மனை, அயலூரிலிருந்து வருபவர்கள் கவலையின்றித் தங்குவதற்குரிய பொது விடமாகிய மன்று ஆகிய இவைகள் இருந்தனவென்று அந்நூல் தெரிவிக்கின்றது.

நவிரமலை: இது மிக்க வளத்தையும் புகழையும் உடையது; இதில், `காரியுண்டிக்கடவுள்'(83)என்று திருநாமம்பெற்ற சிவபெருமானுடைய திருக்கோயிலுண்டு; சேனைகளை அமைத்து நன்னன் அக்கோயிலைப்பரி பாலித்து வந்தனன் (266-30); இம்மலை இக்காலத்தில் திரிசூலகிரி, பர்வதமலை என வழங்கப்படுகின்றது. சிவபெருமானுக்கு அங்கே இக்காலத்து வழங்குந் திருநாமமும் ஸ்ரீகாளகண்டேஸ்வரரென்பது. இம்மலை திருவண்ணாமலையின் வாயுதிக்கில் உள்ளது; ஆதாரம், அக்கோயிற்சாஸனமும், திரிசூலகிரிப்புராணமும். இதனால் நன்னனைச் சைவசமயாபிமானியென்று நினைத்தற்கிடமுண்டு.

சேயாறு: இது "காணுநர் வாயாஅங் கட்கின் சேயாறு", "கடுவரற் கலுழிக் கட்கின் சேயாறு" (476, 555) என அந்நூலுள்ளே பாராட்டிக் கூறப்படும்; இக்காலத்துச் சண்முகநதியென வழங்கும் நதி இதுவே (அருணாசல புராணம், திரிசூலகிரிப்புராணம்)

இவன் மேன்மையையுடையவன்; மிக்ககொடையாளி; பிறருடைய குற்றங்களை உள்ளடக்கிக் குணங்களையே பாராட்டி அவர்களை மேம்படுத்தும் சிறந்த சுற்றத்தையுடையவன்; பொய்யா வாய்மையினன்; மிக்க வீரன்; ஒவ்வொன்றையும் ஆராய்ந்து செய்பவன்; ஐம்பொறிகளையும் வென்றவன்.

மானவிறல்வேள், செருச்செய்முன்பிற் குருசில், திருந்துவேலண்ணல், செருமிக்குப்புகலுந் திருவார்மார்பன், தேம்பாய்கண்ணித் தேர்வீசுகவிகை ஓம்பாவள்ளல், வண்டுபடக் கமழுந் தேம்பாய்கண்ணித் திண்டேர் நன்னன், வெல்போர்ச் சேஎய்ப் பெருவிறல், குன்றநல்லிசைச் சென்றோரும்பல் என அந்நூலுட் பாராட்டப்பெற்றிருத்தலின் இவனுடைய மேம்பாடுகள் புலனாகின்றன.

இவன் மனைவி கற்பிற்சிறந்தவள்; கற்பிற்கு அறிகுறியாகக் கொடியைப் பெற்றவள்(424)

"பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாட், சேரி விழவி னார்ப் பெழுந் தாங்கு " (மதுரைக். 618-9) என்பதனால் நன்னனென்னுமொருவனுடைய பிறந்தநாட் கொண்டாட்டம் பண்டைக்காலத்தில் நடைபெற்று வந்ததாகத் தெரிகின்றது.

இவன் காலத்துப் புலவர் பரணர், பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார், மாங்குடிமருதனார், மாமூலனார் முதலியோர்.