பக்கம் எண் :

719
55 மருவிய குறுமுனி தெரிதமிழ் விளங்க
ஊழி யூழி காலம்
வாழி வாழியிம் மண்மிசை யானே

ஆசிரிய விருத்தம்

பச்சைமா லனைய மேகம் பௌவநீர் பருகிக் கான்ற
எச்சினாற் றிசையு முண்ணு மமிழ்தென வெழுதா வெச்சில்
மெச்சிநா ணாளும் விண்ணோர் மிசைகுவர் வேத போதன்
நச்சினார்க் கினிய னெச்சி னறுந்தமிழ் நுகர்வர் நல்லோர்.

பாண்டி மண்டல சதகம்

கரைபெற்ற தோர்பஞ்ச லட்சண மானதொல் காப்பியமும்
தரைமுற்றும் போற்றிய சிந்தா மணியுந் தமிழ்ச்சங்கத்தின்
நிரைபெற் றுயர்பத்துப் பாட்டும் விளங்க நிசவுரையை
வரைநச்சி னார்க்கினி யன்னையன் பாண்டிய மண்டலமே

பத்துப்பாட்டின் உரையாசிரியராகிய ஆசிரியர் நச்சினார்க்கினியர், பாண்டிவள நாட்டுள்ள மதுராபுரியிற் பிராமணவருணத்திற் பாரத்து வாசகோத்திரத்திற் பிறந்தவர். தமிழ்மொழியிலுள்ள பலவகையான நூல்களிலெல்லாம் மிக்கபயிற்சியுள்ளவர்; சைவசமயத்தினர்; இவர் இன்னராதல், உரைச்சிறப்புப் பாயிர அகவலின் 47-ஆம் அடிமுதலியவற்றால் விளங்கும். சிவதலங்களுட் சிறந்தசிதம்பரத்தினது திருநாமங்களாகிய `திருசிற்றம்பலம்', `பெரும்பற்றப்புலியூர்' என்பவற்றை முறையே ஆறெழுத்தொருமொழிக்கும் ஏழெழுத் தொருமொழிக்கும் உதாரணமாக, "ஓரெழுத்தொருமொழி" (தொல். மொழிமரபு. சூ. 12) என்னுஞ் சூத்திரத்து விசேட வுரையிற்காட்டியிருத்தலாலும், சைவ சமயத்துச்சிறந்த நூல்களாகியதிருவாசகம் திருச்சிற்றம்பலக்கோவையார் திருவுலாப்புறம்முதலியவற்றினின்றும் தமது உரைகளிற் பலவிடங்களில் இலக்கியவிலக்கணப் பொருள்களுக்கும் தத்துவப்பொருளுக்கும் மேற்கோள்கள் எடுத்துக்காட்டி யிருத்தலாலும், அங்ஙனம் மேற்கோள் கொண்ட சிலஇடங்களில் எழுதியுள்ள விசேட வுரைகளாலும், சீவக சிந்தாமணி 362, 1141-ஆம்செய்யுட்களுக்கு எழுதிய விசேடவுரையாலும் திருமுருகாற்றுப் படையுரையிற் காட்டிய சிலநயங்களாலும், மற்றுஞ் சிலவற்றாலும் இவர் சைவசமயியாதல் வெளியாகும். இவருடையபெயர், சிவபெருமானுடைய திருநாமமாகவே எண்ணப்படுகின்றது:

"கச்சைசே ரரவர் போலுங் கறையணி மிடற்றர் போலும்
பிச்சைகொண் டுண்பர் போலும் பேரரு ளாளர் போலும்
இச்சையான் மலர்க டூவி யிரவொடு பகலுந் தம்மை
நச்சுவார்க் கினியர் போலு நாகவீச் சுரவ னாரே
(திருநா. திருநாகேச்சுரம், தே.)